காமராஜர் பேச்சுப்போட்டி-3

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் .
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
அறத்தைநிலை காணும் ..

கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் 
ஒன்றுமில்லை...
ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு பேரிறைவா....

இறையை வணங்கி
அவையை வணங்கி
அவையில் இருக்கும் 
அனைவரையும் 
இறையாய் வணங்கி 
என் உரையை துவங்குகிறேன்....

நாளெல்லாம் பொழுதெல்லாம் தேசப் பற்றில் வாழ்ந்தவர்,
பிள்ளையெலாம் பள்ளிச்செல்ல கல்விக் கண்ணைத் 
திறந்தவர்,
கொள்ளைகொள்ளையாய்ச் 
சொத்து சேர்க்கா 
சொக்கத் தமிழராய் வாழ்ந்தவர்
மக்கள் தொண்டை 
மனதில்கொண்டே 
மக்களாட்சி கண்டவர்
புவிவாழ்க்கை ஆசைஇல்லாப் 
புனித வாழ்க்கை வாழ்ந்தவர்.

என்ன கொடுப்பான் 
எதை கொடுப்பான் 
என்று இவர்கள் 
என்னும் முன்னே 
கலை கொடுப்பான் 
கல்வி கொடுப்பான் 
போதாது போதாதென்றால் 
இன்னும் கொடுப்பான் 
இவையும் குறைவென்றால் 
எங்கள் தலைவன் 
தன்னை கொடுப்பான் 
தன் உயிரையும் கொடுப்பான்...
ஆறடி உயரம்
அவரால் ஏழ்மைக்கு துயரம்...
சிவகாமியின் தவப்புதல்வன் இந்தியாவின் பெருந்தலைவன்...

தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது... 
"அயர்விலர்
அன்னமாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!" என்று
பாண்டிய மன்னன் இளம் பெருவழுதி கூறியது போல பிறருக்காகவே வாழ்ந்தவர் காமராசர்...

தமிழகத்தின் பொற்காலம் எதுவென்றால் அது காமராஜர் ஆட்சி தான் என்று சிறு குழந்தை கூட கூறும்...
உலக அரசியல் வல்லுனர்களே அவரின் ஆட்சியை கண்டு வியந்துள்ளனர்..
வெண்மையும் தூய்மையும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் கொண்ட தூய்மையான தலைவன்... தமிழ்நாட்டில் கல்வி வளர்த்திட அரும்பாடு பட்டவர். அதற்கு வறுமை தடையாக இருப்பதை அறிந்து மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்து உலகையே வியப்படையச் செய்தவர்...
நாட்டின் முதுகலும்பாகிய விவசாயம் செழிக்கவும் பொருளாதாரம் ஏற்றம் பெறவும் இடைவிடாமல் உழைத்தவர்.

மனித குலத்துக்கும் நாட்டுக்கும் அருந்தொண்டாற்றிப் பாரத மக்களின் உள்ளங்களில் நிலையான இடத்தைப் பெற்றவர் காமராசர்.
1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று விருது நகரில் குமாரசுவாமி, சிவகாமி அம்மாள் ஆகியோர்க்கு மகனாய் உதித்தவர். சிறு வயதிலிருந்தே தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார். அதனால் பலமுறை சிறை சென்றார்.
நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சாதாரணத் தொண்டனாகச் சேர்ந்து உழைப்பால் உயர்ந்தவர். ஏழை மக்களைக் கண்டு மனமிரங்கியவர். ' பேச்சைக் குறை செயலை அதிகமாக்கு' என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பவர். அரசியல் மேதையாகத் திகழ்ந்தவர். பாரத நாட்டுப் பண்பாட்டினை எந்நிலையிலும் விடாதவர்.

காமராஜர் போல பண்புடையவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்குகிறது; அவர்கள் இல்லாவிட்டால், அது மண்ணோடு மண்ணாக அழிந்துவிடும், இதைதான் திருவள்ளுவரும், 
"பண்புடையார் பட்டுண்டு உலகம் ; அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்கிறார்...

பெருந்தன்மை, எளிமை, வஞ்சனையற்ற உள்ளம், அஞ்சாமை ஆகிய பண்புகளின் உறைவிடம், பதவிப் பித்து அவரை எந்நாளிலும் ஆட்கொண்டதில்லை. காங்கிரசு இயக்கத்தில் கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து தன்னலமற்ற தன் உழைப்பினால் கொடி கட்டி ஆளும் உயர் அமைச்சர் ஆனவர். இவரது தன்னலமற்ற தன்மைக்கு ஒரே எடுத்துக்காட்டு  அரசியலில் முதியோர்கள் பதவி விலகி இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற காமராசர் திட்டமாகும்.

ஏழைகளின் அறிவுப் பசியை போக்க
அவர்களின் வயிற்றுப் பசி போக்கியர் .
பள்ளிகள் பல திறந்து
தம் பதவியில் சிறந்து 
அரசியலில் உயர்ந்து
தமிழகத்தில் தலை நிமிர்ந்து 
இறந்தும் வாழும் ஏழைப்பங்காளர்.
அவர் நிறமோ கருப்பு
அவர் தரமோ சிறப்பு 
அவர் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை
அவரை படிக்காதவர் இன்று 
எவரும் இல்லை 
அள்ளிக் கொடுத்தவர் 
கைகளோ நீளம்
கோடி யுகம் கடந்தும் அவர் புகழ் இம்மண்ணிலே வாழும்....

எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் கல்விக்கண் திறந்த காமராசர் தான் தமிழகத்திற்கு இறைவன் என்று கூறி,

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்...
சில காவியப் பொருள்களை
தூவி விட்டாள்...
அலையனும் எண்ணங்கள்
ஓடவிட்டாள்...
அதை ஆயிரம் உவமையில் 
பாட விட்டாள்...

குழந்தையின் கோடுகள் ஓவியமா இந்த குருடன் வரைவதும் காவியமா நினைத்ததை உரைத்தேன் நடுவர்களே...
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்....

பேசியது சுருக்கம்...
தேவையில்லை விளக்கம்...
முடிவில் வணங்குவது
என் வழக்கம்...
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்....

கருத்துகள்

  1. Thanks Anna ongalloda speech padichi three years yah nan than kamarajar speech last nan than first . Thanks Anna.😊😊😊😊.Allah ungalukku neenda aulaiyum u dal arokkiyathaium tharuvaanaaga ameen☺☺☺

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி