பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

பழையன மறவாப் பண்பால் 
பண்பாடு போற்றும் சிறப்பால்
தமிழ்ப்பால் மீது கொண்ட விருப்பால்
அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால்
பொருட்பால் கிடைத்த மலைப்பால்
இன்பத்துப்பால் நடக்கும் உள்ளன்பால்
நாவும் இனிக்கட்டும் கரும்பால்
புவியெங்கும் ஒலிக்கட்டும் தமிழ்ப்பால்!
இணைப்பால் இருகரம் குவிப்பால்
வரவேற்கிறேன் அனைவரையும் எனது அன்பால்...

பசுமையும் பாரம்பரியமும் ....


"பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்".

என்றார் பாரதி. 

இந்த கவிதை ஒன்றே போதும் எம்

நாட்டின் பசுமையும் பாரம்பரியமும் பற்றி தெரிந்துகொள்வதற்கு 


"நெல்லின்றேல் உணவில்லை

உணவின்றேல் உயிரில்லை
உயிரின்றேல் உலகமில்லை
உலகமின்றேல் உலகாளும் மன்னனில்லை
எல்லாம் நெல்லுக்குள் அடக்கம்
நெல்லுக்குள் மன்னனும் அடங்கும்
எண்ணமுடியா பெருமைசார் நெல்போல

வாழ்க"

மன்னனுக்கு வாழ்த்துரைத்த

அவ்வையின் வழி வந்தது எம் பாரம்பரியம். 


"கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீ துள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பைத் தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும்" 

என்று வேண்டியதும் மனிதன் முதல் புல் பூண்டு வரை

இன்பமாக பசுமையாக  வாழ விரும்புவது எம் பாரம்பரியம் .


"இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரும் நாடு;
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித்தரு நாடு

எம் பாரம்பரிய பாரத திருநாடு"


உழுது பயிர் செய்தலே வேளாண்மை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மாற்றாரெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்னும் வாக்கிற்கு இணங்க வேளாண்மை நமது முக்கிய பாரம்பரியம். ,'உழந்தும் உழவே தலை',, 'உழவினார் கைம்மடங்கின் வாழ்க்கை இல்லை" என்றெல்லாம் உழவுத் தொழிலையும், உழவர் பெருமக்களையும் உயர்த்திப் பாடியுள்ளார் வள்ளுவர். 'சீரைத் தேடின் ஏரைத் தேடு' என்பதும், 'மேழிச் செல்வம் கோழை படாது' என்பதும் வேளாண்மையின் சிறப்பைப் பேசும் வீரிய மொழிகள்.

வரலாறு, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் செழுமையாகத் திகழும் தமிழ்நாடு, எவ்வளவோ முன்னேறி வந்தாலும், அதன் பாரம்பரியத்தில் வலுவாக வேரூன்றியுள்ளது. யுனெஸ்கோவால் சான்றளிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், தமிழ்நாடு அரசால் பாரம்பரிய நகரங்களாக அறிவிக்கப்பட்ட 48 மையங்கள் மற்றும் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட எண்ணற்ற பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் நம் மாநிலத்தில் உள்ளன.

                     எமது பாரம்பரிய  தமிழர், தம் சுற்றத்தை மட்டுமன்றி, எல்லாரையும் தம் உறவினராகவே கருதினர்; எந்த நாட்டையும் தம் நாடாகவே போற்றினர்; எல்லாரும் வாழவேண்டும் என்கிற உயரிய பண்பைப் பாதுகாத்தனர்; தேவாமிருதமாயினும், விருந்தினரோடு பகிர்ந்துண்டனர்; அஞ்ச வேண்டியவற்றிற்கு மட்டுமே அஞ்சி வாழ்ந்து, பொதுவாகவே அச்சமிலாது இருந்தனர்; பிறருக்குப் பயன்பட வாழ்ந்தனர்; உயரிய பண்பாட்டைக் கடைப்பிடித்தனர்.


"திசையை எட்டாகப் பிரித்து, 
இசையை ஏழாகப் பிரித்து, 
சுவையை ஆறாகப் பிரித்து,
நிலத்தை ஐந்தாகப் பிரித்து,
காற்றை நான்காகப் பிரித்து,
மொழியை மூன்றாகப் பிரித்து
வாழ்க்கையை அகம் புறம் என
இரண்டாகப் பிரித்து 

இறைவன் ஒருவனே" என்றது

என் பாரம்பரியம்
எம் தமிழ்ப் பாரம்பரியம்...


"முல்லைக்கு தேர் ஈந்து 
பிற உயிர் பேணி 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி
இயற்கையை  தாயாய் வணங்கி 
மொழியை உயிராய் வணங்கி 
அறம் செய்ய விரும்பி 
அறத்தால் வருவதே இன்பம் என்று கூறிய 
வள்ளுவன் வழியில் வந்தது 
எம் நாட்டின் பசுமையும் 

எம் மக்களின் பாரம்பரியமும்" என்று கூறி


விழுவது எழுவதற்கு

தொழுவது தொடர்வதற்கு

படிப்பது விழிப்பதற்கு 

துடிப்பது முடிப்பதற்கு


வாயுண்டு சுவைப்பதற்கு - நல்ல

வார்த்தைகள் கதைப்பதற்கு!

செவிகளோ இனிப்பதற்கு

செந்தமிழைக் கேட்பதற்கு


உயிரெல்லாம் இறை வனப்பு -

உள்ளத்தினில் அதைச் செதுக்கு!.

அன்பெனும் விதைவிதைத்து

வளர்த்திடு அரவணைத்து!

பேசினேன் நல்ல தலைப்பை எடுத்து

கேட்டீர்கள் செவி மடுத்து

நிறுத்துகிறேன் பேச்சை முடித்து

அனைவருக்கும் நன்றி தொடுத்து...  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி