பெண்மையை போற்றுவோம்- பேச்சுப்போட்டி
கவின்பெறு தமிழே!
என்னைக் காக்கின்ற அருளே!
இன்பம் குவிந்தநற் பொருளே!
உன்னால் விலகும் இருளே
சாகா வரம் பெற்ற எழிலே!
வாழ்ந்து சலிக்காத தாயே!
துன்பம் மேவாத ஒளியே!
தினம் என்னை செதுக்கும் உளியே
தமிழை வணங்குவது வழக்கம்
அதுவே என் பழக்கம்
தமிழே என்றும் என் முழக்கம்
வந்தவர் அனைவருக்கும் வணக்கம்
இதுவே எனது உரையின் துவக்கம்...
அதனால்தான் நாட்டை தாய்நாடு என்கிறோம். நிலத்தைப் பூமாதேவி என்கிறோம்.நீரை கங்கா தேவி என்கிறோம். செல்வத்தை லட்சுமி என்கிறோம். கல்வியை சரஸ்வதி என்று வணங்குகிறோம். வீரத்தை சக்திதேவி என்கிறோம். சோற்றை அன்னம் என்கிறோம். வெளிச்சத்தைக்கூட ஜோதி என்று அழைக்கிறோம். இவ்வளவு ஏன் உலகத்தில் அனைவரும் தேடும் நிம்மதியை கூட சாந்தி என்று தான் அழைக்கிறோம்.
"இல்லாள் அகத்திருக்க
இல்லாதது எதுவும் இல்லை" என்பார்கள் அதுபோல
இன்பமும் மகிழ்ச்சியும் தந்து உலகை இயக்கிக் கொண்டிருப்பவள் பெண். பார்க்கும் பொருள் யாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவள் பெண்.
பெண்கள் தங்களை முன்னேற்றம்
அடைந்தவர்களாக மெய்ப்பிப்பதற்கு முன்னர் பல போராட்டங்களையும் சவால்களையும் கடந்து வர வேண்டியதாயிற்று.
"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!"
என்று மகாகவி கூறியது போல
பெண்களை பலவீனமானவர்களாகவே பார்த்து வந்த சமூகம் மிக எளிதில் பலசாலிகள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. மெல்ல மெல்ல தொழில் துறையில் தடம் பதித்த பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் தர மறுத்தது. பல இடங்களில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதற்காகப் போராடி பெண்களின் உரிமைகளை மீட்ட நாள் மார்ச் எட்டாம் நாள், உலக மகளிர் தினம். இது நம் அம்மாவுக்கான தினம். அக்காவுக்கான தினம். தங்கைக்கான தினம், அனைத்து மங்கைக்கான தினம். உலகின் அனைத்து மகளிருக்குமான தினம்.
பெண்களை பற்றி கவிபாடவும், கற்பனைத் தேர் ஓட்டவும் பெண்ணை ஒரு அழகு பதுமையாக மட்டும் மிகைப்படுத்திப் பேசிப் பேசி பெரும்பாலான பெண்களைப் பேச விடாதபடி பேசா மடந்தைகளாக முடக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.
காலையில் எழுந்தது முதல்
இரவு படுக்கைக்குச் செல்லும்வரை
ஒருபெண் கடந்துவர
வேண்டிய போராட்டக் களங்கள்
எத்தனையோ இருக்கிறது.
"அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்"
எனும் பாரதியார் வாக்கின்படி அறியாமையில் இருந்து வெளிவந்து நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளையும் கொண்டு வாழ்கிறார்கள் பெண்கள்.
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது பெரும்பான்மை ஆண்களின் வாழ்க்கை அனுபவம். அந்தப் பெண் தாயாகவும் இருப்பாள்; தாரமாகவும் இருப்பாள்.
கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் பெண்கள் தங்கள் வாழ்வையே தியாகம் செய்கிறார்கள். ஆண்கள் குடும்பத்திற்காக எட்டு மணி நேரம் வேலை செய்தால், பெண்கள் நாள் முழுதும் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள்.
எல்லா பாசத்தையுமே துறந்துவிட்ட பட்டினத்தார், தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல் தவித்துப் புலம்பிப் பாடியது தாய்மையின் சிறப்புக்கு ஓர் உதாரணமாகும். படித்த பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பணியாற்றி குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள். அதிகப் படிப்பு இல்லாத பெண்கள் சித்தாள், சாலை போடும் பணி போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.
ஆண்களின் வருமானம் தீய வழிகளில் செலவாகும் வாய்ப்புண்டு. பெண்களின் வருமானம் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது குடும்ப நலனுக்கே பயன்படும்.
குடும்ப பெண்களின் சிரமங்களைவிட, வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக வேலை பளுவுடன் நடைமுறையில் சில சிரமங்களையும் சந்திக்கின்றனர். குடும்பப் பெண்களை கிரகலட்சுமி எனக் கொண்டாடும் போது, வேலை பார்க்கும் பெண்களை நடமாடும் மகாலட்சுமி என்றே போற்ற வேண்டும்.
கடைசியாக சொல்கிறேன்,
"பெண்களால் ஆயது உலகு பெண்களே வாழ்க்கையின் விழுது
பெண்களை நீ தினம் தொழுது
பெண்மையைப் போற்றி வணங்கு
பெண்ணின் மதிப்பை உயர்வாக்கி
பிறந்த பிறப்பினை நலமாக்கி
பண்பினில் மனிதனை வளமாக்கி
நன்றியை நெஞ்சினில் மிகத்தேக்கி"
யாம் பேசியது சுருக்கம்
அதன் கருத்தோ பெருக்கம்
இனி தேவை இல்லை விளக்கம்
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்...
கருத்துகள்
கருத்துரையிடுக