திருக்குறள் பேச்சுப்போட்டி

அன்பைப் பெருக்கி 
எனதாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே 
தமிழே தாயுள்ளமே, 
அன்பு கூட்டி அக்கறை காட்டும்
ஆசிரியப் பெருமக்களே
இன்று சின்னஞ்சிறு மொட்டாய்
நாளை ஆலமரத்து வித்தாய்
இந்தியாவின் சொத்தாய்
உருவெடுக்கக் காத்திருக்கும்
நாளைய நாயகர்களே
எம் பள்ளி மாணவர்களே
உங்கள் அத்துனை பேரையும் வணங்கி
பேசப்போகிறேன் என் தலைப்பில் இறங்கி..

இரண்டு அடிக்குள் சரவெடியை வைத்து கையில் எடுத்தால் 
அதை படித்தால் 
தலையில் அடித்தாற் போல் 
இருக்கும் ஒரு நூல்...
வாய்மை, உண்மை, பொறுமை, கடமை, கருணை, அன்பு, சுயக்கட்டுப்பாடு, நன்றியுணர்வு, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை, கள்ளாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, தனி மனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், ஆட்சி, அரசன், மக்கள், அறம், பொருள், இன்பம் என 133 அதிகாரங்களை கொண்டு 1330 வைரமணிகளை கொண்ட உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட , 
"பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்", "உலகப் பொதுமறை' எனப் பல பெயர்களால் போற்றப்படுகின்ற திருக்குறளை பற்றித்தான் பேச வந்துள்ளேன்...
தெய்வத்தால் ஆகாதெனினும் உன் முயற்சியால் அதன் பயிற்சியால் மெய்யாக உன் மெய் வருத்தி உழைத்தால் அந்த முயற்சி உன் மெய் வருத்த கூலி தரும் என்று தோல்வியால் குழியில் விழுந்தவனை கையை பிடித்து தூக்கி விடுவது திருக்குறள். இந்த உலகத்தில் உள்ளவைகள் அனைத்தும் மொத்தமாய் அழிந்து போனாலும் திருக்குறள் மட்டும் இருந்து விட்டால் போதும் மொத்தமாய் புதுப்பித்து விடலாம் என்கின்றனர் சான்றோர்...  
இரண்டு அடியில் இவ்வளவு கருத்துக்களை சொல்ல முடியுமா என கேட்டால் ஆம் என்கிறார் வள்ளுவர், அதைத்தான் ஔவையாரும் அணுவை பிளந்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். அதைவிட ஒரு படி மேலே போய் வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என வள்ளுவன் பிறந்ததால் தான் இந்த வையகத்திற்கே பெருமை என்கிறார் பாரதிதாசன். அதற்கெல்லாம் மேலே போய் திருக்குறளை எழுதியதே இறைவன் தான் என்று ஒரே போடாய் போட்டு விட்டார் உக்கிர பெருவழுதியார் "நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்." என்று. 
ஒருவன் தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு உரிய சிறந்த வழி, தீங்கு செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து, அவர்கள் செய்த தீங்கினையும், தான் செய்த நன்மையினையும் மறந்து விடுவதே ஆகும்” என்று “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்" என்று பழிவாங்கும் எண்ணத்திற்கு கடிவாளம் போட்டது திருக்குறள்.
 இனிய வார்த்தைகளை மட்டும் பேசு கனி இருப்ப காய் கவர்ந்தற்று. நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் எப்பொழுதும் உயர்ந்த நிலைகளையே நினைவில்கொள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். முயற்சி செய்தால் முடியாதது ஏதும் இல்லை முயற்சி திருவினையாக்கும்.
உயிரை விட ஒழுக்கம் உயர்ந்தது, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
நன்றி மறப்பது நன்றன்று தமக்கு நடந்த தீமையை அன்றே மறப்பது நன்று. சொல்லுதல் யாருக்கும் எளிது அரியது சொல்லிய வண்ணம் செயல், புறத்தின் தூய்மை நீரால் அமையலாம் அகத்தின் தூய்மை வாய்மையால் மட்டுமே காணப்படும், பொய்யாமையைப் போல உலகில் பெரிய சிறப்பில்லை, அதுவே ஒருவனுக்கு எல்லா அறமுந்தரும்... இது போன்ற கருத்துக்களை அடுக்கிக் கொண்டே சென்றால் இன்று ஒரு நாள் போதாது. 
ஓராயிரம் நூல் எதிர் நிற்பினும்
திருக்குறளுக்கு ஈடு உண்டா,
தீராக்கடல் போல் திரளும் 
புதுப்புது பொருளுக்கு 
குறைவு உண்டா...
முப்பெரும் கடலுக்கு 
அப்பாலும் பாய்ந்தது 
முப்பாலின் திருப்புமுனை-நம் அப்பனுக்கு அப்பனாம் 
அவனுக்கு பாட்டனாம் 
வள்ளுவன்தான் அறிவுத்துணை.
சட்டங்களாகவும் திட்டங்களாகவும்
செதுக்கிய சிற்ப வரிகள் - சிறு
வட்டத்தில் குறுகாது 
வழியும் தப்பாது 
வைர வெற்றி நெறிகள்.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், 
திருக்குறள் படித்தால்
வாழ்வு புரியும் 
ஞானம் விரியும்
பற்று பிரியும்
அன்பு பெருகும் 
அறம் வளரும்
பண்பு உயரும்
பணிவு வரும்
பக்தி கூடும்
மனம் அடங்கும்
உயிர் ஒளிரும்...
உண்மை மட்டுமே சரியானது.
அதன் உயர்வே என்றும் வரமாவது.
பொய்யின் இன்பம் கீழானது.
நேர்மையின் வழியே முறையானது.
மாற்றம் ஒன்றே நிலையானது.
இதை ஏற்றால் வாழ்க்கை சுகமானது.
வீழ்ச்சியும் வாழ்வில் உயர்வானது.
வீழ்கின்ற அருவியே மேலானது.
திருக்குறள் கிடைத்தது வரமாக,
அதை பயன்படுத்துவோம் சரியாக, வாழ்க்கையை நடத்துவோம் முறையாக,
பெருமைகள் புரிவோம் பெரிதாக.

வணங்கி முடிப்பதே தமிழின் அறம்,
வணங்குவது என் இரு கரம்,
விடை பெறுகிறேன் 
என் பேச்சை நிறுத்தி,
வாய்ப்பளித்த அனைவருக்கும் 
நன்றி செலுத்தி,
உலகம் உள்ள நாள் வரைக்கும்
வள்ளுவர் திருக்குறளின் புகழ் மணக்கும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி