பேச்சுப்போட்டி - கர்மவீரர் காமராசர்
ஈக்கள் சுவைத்திடும் கனியே
பூவில் படர்ந்த பனித்துளியே
இருட்டை வீழ்த்தும் பேரொளியே
என் அன்னை தமிழே
கட்டிக்கரும்பே
உம்மையும் அவையோரையும் வணங்கி, நல்ல கருத்துக்களில் இயங்கி, பேசப் போகிறேன் என் தலைப்பில் இறங்கி...
இனம் காட்டும் நிறம்,
குணம் சொல்லும் உடை,
தைரியம் அறிவிக்கும் உடல்,
வணங்கத் தோன்றும் முகம்,
தோளில் துண்டு,
பேச்சில் அன்பு,
நடத்தையில் பண்பு,
வாழ்க்கையில் எளிமை,
அனைத்திலும் பொறுமை,
பெரியோர் இடத்தில் பணிவு,
அரசியலில் துணிவு,
உலகம் போற்றும் மகராசர் ...
அவரே எங்கள் காமராசர்...
முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லா தொழிலாளி பழனி மலை ஆண்டிக்கு பக்கத்தில் குடியிருப்போன் பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான் இல்லானும் இல்லான் இல்லையெனும் ஏக்கமில்லான்... அரசியலை காதலுக்கு அர்பணிப்போர் மத்தியிலே காதலயே அரசியலில் கரைத்துவிட்ட கங்கை அவர் எங்கள் காமராசர்
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்றார் வள்ளுவர். இந்தக் குறள் கூறுவது போல ஆண்பிள்ளையை ஈன்றபொழுதைவிட அவன் அரியணையில் இருந்தபொழுது உலகம் புகழ்ந்ததைக் கேட்கும் பாக்கியம் ஒரு தாய்க்குக் கிடைத்தது. காமராசரை ஈன்றெடுத்த சிவகாமியம்மாள் தான் இத்தகு பெருமைகளைப் பெற்ற தூய தாய். இத்தாயின் அருமைப் புதல்வனாகப் பிறந்து தமிழகம் உயர தன் குடும்பத்தையே துறந்த பெருந்தகை காமராசர். பாரத மக்களால்
'பாரதப் 'பெருந்தலைவர்' என்றும் ‘கர்மவீரர்' என்றும் அன்புடன் போற்றப்படுபவர். இவரை நான் என் தலைவராக தேர்ந்தெடுத்து போற்றுவதற்கான காரணங்களை இங்கே கூறுகிறேன் கேளுங்கள் ....
காமராசர் இன்றைய விருதுநகர் மாவட்டம் விருதுப்பட்டி என்னும் கிராமத்தில் 1903-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15-ஆம் நாள் 'குமாரசுவாமி - சிவகாமி' தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே தந்தையை இழந்த காமராசர் தாயின் அரவணைப்பில் வளர்ந்தபொழுதே நாட்டு விடுதலைப் போரில் ஈர்க்கப்பட்டார். காந்தியடிகள் தலைமையில் நாடு வெள்ளையனுக்கெதிராக திரண்டபொழுது தானும் பங்கு கொண்டார். தமிழக காங்கிரசின் அசைக்க முடியாத பெரும் தலைவராக இளமைக் காலத்திலேயே விளங்கினார்.
காமராசர் என்றவுடன் தமிழக அரசியலில் பொற்கால ஆட்சி செய்த ஒரே முதல்வர் என அரசியல் வல்லுநர்கள் கூறுவதுதான் பலரின் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தூய ஆட்சி செய்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் காமராசர். அவரது ஆட்சி,
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க அமைந்திருந்தது. ஏழை எளிய மக்கள் கல்வி பயின்றால்தான் நாட்டின் வளம் பெருகும். நாடு அறியாமை இருளிலிருந்து விலகும் என்பதை அறிந்து நாடு முழுவதும் கல்விக்கூடங்களைத் திறந்தார். ஏழைகள் பயில மதிய உணவுத்திட்டத்தை அமல்படுத்தினார். தமிழ் மாநிலம் தலைசிறந்த தலைவனைக் கண்டு தலை வணங்கியது.
முதல்வராக இருக்கும்பொழுது ஒருசமயம் தாயைப் பார்க்கச் சென்றார். அப்பொழுது வீட்டில் நீர்க்குழாய் இணைப்பு இருந்ததைக் கண்டவர் “எப்படி இது இங்கே வந்தது?" என்று தன் தாயிடம் கேட்டார். “நமது நகராட்சித் தலைவர்தான் வீட்டில் கொண்டு வந்து வைத்தார்” என்று தாய் கூறினார். உடனே காமராசர் அருகிலிருந்த நகராட்சித் தலைவரை நோக்கி, "இதை எப்படி கொண்டு வந்து வைக்கலாம்? நான் குடிநீர்க் குழாய்க்கு விண்ணப்பம் செய்யவில்லையே” என்று கேள்வி எழுப்பினார். உடனே அவரது முன்னிலையில் குடிநீர்க்குழாய் தெருவில் பதிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்தின் முன் தன் தாயையும் தன்னையும் பொதுமக்களையும் ஒன்றாகவே கருதியவர் பெருந்தகை காமராசர்.
தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் பிறர்க்கெனவே வாழ்ந்த காமராசரை பார்த்து கண்ணதாசன் ஒரு கவிதை எழுதுகிறார்...
தங்கமே
தன் பொதிகை சாரலே
தண்ணிலவே
சிங்கமே என்று அழைத்துச் சீராட்டும்
தாய் தவிர சொந்தம் என்று ஏதுமில்லை
துணை இருக்க மங்கை இல்லை
தூய மணி மண்டபங்கள்
தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே
எனக் குமுறுகிறார் கவியரசர் கண்ணதாசன்...
இரண்டு முறைகள் பாரதப் பிரதம அமைச்சராகும் வாய்ப்பு அவருக்கு வந்தபொழுதும் அதை மறுத்தார். தலைமைக்கு ஏற்ற இரண்டு பிரதம அமைச்சர்களை உருவாக்கி
'அரசர்களை உருவாக்குபவர்'
(The King-maker) என்ற அடைமொழியைப் பெற்றார். தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய அரசியலின் போக்கையே நிர்ணயிக்கும் அதிகாரமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றிய காலத்திலும் ஆணவமற்ற, அதிகாரவெறி இல்லாத அன்புமிக்க அருந்தலைவராக இருந்த ஒரே தலைவர் காமராசர் என்றால் அது மிகையாகது.
“உலகம் அழியாமல் நிலைபெற்று இருப்பதற்குக் காரணம், தமக்கென முயலாமல் பிறர்க்கென வாழும் பெருவாழ்வு வாழ்பவர்கள் இருப்பதால் தான்"
என்று புறநானூறு கூறுகின்றது. இக்கூற்றிற்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை வாழ்ந்து இவ்வுலகை நிலைபெறச் செய்தவர் காமராசர். இவர் கல்வித் துறையில் பல சாதனைகளை செய்து தமிழகத்தின் கல்விக் கண் திறந்தவரானார். தொழில் துறையில் ஆலைகள் பல நிறுவி வேலை வாய்ப்புகளைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சியை உருவாக்கினார். முதுகெலும்பாகிய விவசாயம் செழிக்க அணைகள் பல கண்டு அரும்பசியைப் போக்கினார். இதனால் ‘கர்மவீரர்' என்றும், ‘செயல்வீரர்' என்றும், 'மேதை' என்றும் பட்டங்கள் பல சூழ்ந்து பெருமைகள் பல பெற்றுக் கொண்டன. "கொடுத்தல் உயர்ந்தன்று - அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"
என்கிறது புறநானூறு. அதுபோல கொள் என பிறர்க்குக் கொடுத்தார். அதேசமயம், பிறர் தந்த பெரும் பதவிகளை 'கொள்ளேன்' என மறுத்து மிகவும் உயர்ந்தார்.
காந்தியின் மறைவுக்குப் பின் 'கறுப்புக் காந்தி' என அழைக்கப்பட்ட காமராசர் தியாகத்தின் மறுஉருவமாக விளங்கினார். தியாகமே காமராசர். காமராசரே தியாகம். இதனால்தான் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு பாடுகிறார்..
"பூமிக்குத் தொண்டு செய்யணும் தாத்தா
புத்தியைக் கொஞ்சம் கத்துக்கொடு" என்று கேட்கும் பேரனையும்,
"காமராசரை கண்ணால் பார்த்தால் தானே தேசபக்தி வரும்"
என்று புத்திகூறும் தாத்தாவையும் தன் பாடல் வழி காட்டி பரவசப்படுகின்றார். இவற்றிற்கெல்லாம் மேலாக கவியரசு கண்ணதாசன்,
"கல்லாமை தனைக் கருவறுக்கின்றேன்
இல்லாமை தனை இல்லாதாக்குவேன்"
என இரத்தினச் சுருக்கமாய் கர்மவீரரின் செயல்களைப் புகழ்கின்றார்.
விடுதலையடைந்த தேசம் அனைத்து சமுதாய அநீதிகளையும் ஒழித்து நியாயமான முறையில் முன்னேற கல்வி அவசியம். எனவே, கல்வியின் மூலம் சமுதாய மாற்றத்தையும் நாட்டில் வளர்ச்சியையும் உண்டாக்க முடியும் என்பதை தன் வாழ்நாளில் செயல்படுத்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராசர். அவரால் வளர்ச்சி பெற்ற தமிழகத்தில் பயிலும் ஒரு மாணவன் என்னும் முறையில் அவரை என் தலைவராகக் கூறுவதில் நான் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன்.
கர்மவீரர் காமராசர் மறைந்த உடன் அவர் வசித்த வாடகை வீட்டை வீட்டில் சொந்தக்காரர் எடுத்துக் கொண்டார். பயன்படுத்திய காரை காங்கிரஸ் எடுத்துக் கொண்டது. உடலை அக்னி எடுத்துக் கொண்டது.
அவருடைய பெயரை மட்டும் வரலாறு எடுத்துக் கொண்டது...
வாழ்க பாரதம்!
வளர்க காமராசர் புகழ்!
பேச வாய்ப்பளித்து பேச விட்டு அமைதி காத்து ஒத்துழைத்த அத்துணை பேரையும் சிரம் தாழ்ந்து வணங்குவதே நல்ல பழக்கம் அதுவே எனது வழக்கம் தமிழே என்றும் என் முழக்கம் பேசி முடிக்கிறேன் வணக்கம்....
காமராசரைக் குறித்த அருமையான தகவல்களைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி... தமிழ் வளரட்டும் மென்மேலும்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு