அப்துல்கலாம் - கட்டுரை

முன்னுரை:
           21-ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் அறிஞரும், பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்களே நான் விரும்பும் அறிவியல் அறிஞராவார். பாரதத்தின் தென் கோடியில் பிறந்து, வளர்ந்து தன் உன்னத உழைப்பால் உயர்ந்து பாரதத்தின் வடகோடியில் இந்தியாவின் முதல் குடிமகனாக சிம்மாசனத்தில் அமர்ந்த பண்பாளர் அப்துல் கலாம் அவர்கள். அவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு:
          விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

அறிவியல் அறிஞர் கலாம்:
          1963-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்த கலாம் அவர்கள் எஸ்.எல்.வி. III இல் பணியாற்றினார். அதன் மூலம் ரோகிணி என்ற செயற்கைக்கோளின்  திட்ட இயக்குநராக பணியாற்றி அதை விண்ணில் ஏவி பூமியை வெற்றிகரமாகக் சுற்றி வரச் செய்தார்.
            கால் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதத்தினால் துன்பப்படுபவர்களுக்குகாக மிக இலேசான கார்பன் பொருளைப் பயன்படுத்தி செயற்கைக் கால்களை உருவாக்கினார். மேலும் கலாம் அவர்கள் திரிசூல், பிரித்வி, ஆகாஷ், நாக் மற்றும் அக்னி என்ற ஏவுகணைகளையும் விண்ணில் செலுத்தினார்.
            அணுகுண்டு சோதனை நடத்தி வல்லரசு நாடுகளுக்கு சவால்விட்டார் கலாம். இன்று உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கக் காரணமானவர் கலாம் என்றால் அது மிகையில்லை.

கலாமின் குணநலன்கள்:
         ' மதச் சார்பின்மை' என்ற கொள்கைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். இந்திய வரலாற்றில் நேருவுக்கு அடுத்தபடியாக குழந்தைகளிடம் நெருங்கிப் பழகுபவர் கலாம் அவர்கள்தான். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களை சந்தித்துப் பேச அவர் தவறுவதில்லை. ஏவுகணைகளாக மாணவர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கு பொறுமையாக, சிரித்த முகத்துடன் பதில் அளிப்பார். எளிமை, அடக்கம், அறிவு என்ற மூன்று உயர்ந்த குணங்களை தன்னகத்தே கொண்டவர். பாரத மண்ணில் பிறந்த இளைஞர்களிடம் அபார நம்பிக்கைக் கொண்டவர். இந்திய இளைஞர்களுக்கு இவர் கூறும் அறிவுரை, "கனவு, கனவு, கனவு; இதனை சிந்தனை வடிவமாக்குங்கள், பின் செயலாற்ற முனைப்படுங்கள்” என்பதாகும்.

விருதுகள்:
           பாரத நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டுகளுக்காக நடுவணரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருதினை வழங்கியுள்ளது. 23 பல்கலைக்கழகங்கள் இவருக்கு 'டாக்டர் ஆஃப் சயின்ஸ்' பட்டத்தை வழங்கியுள்ளன. ஆர்யபட்டா விருது, நேரு விருது போன்று பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ‘டாக்டர் ஆஃப் ஃபிலாசஃபி' பட்டத்தை வழங்கியுள்ளது. விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 'தேசிகோத்தமா' பட்டத்தை வழங்கியுள்ளது.

முடிவுரை:
         அறிவியல் மீதும் நாட்டின் மீதும் எந்தளவு பற்றுக் கொண்டிருக்கிறாரோ, அந்தளவு தாய்மொழியாம் தமிழ்மீதும் பற்று கொண்டவர் கலாம் அவர்கள்.
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்" என்ற குறள் அவருக்கு மிகவும் பிடித்ததாகும். அக்குறளின் வழி நடந்து, இந்திய மாணவர்கள் பற்றிய அவரின் கனவை நிறைவேற்றுவதே நமது கடமையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி