நான் மருத்துவரானால் - கட்டுரை

 முன்னுரை
         உலகில் வாழும் மக்கள், ஏதேனும் ஒரு தொழிலைச் செய்துதான் உயிர்வாழ்கிறார்கள். ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு வகையில் முக்கியமானதாகவே விளங்குகிறது. உழவுத்தொழில் என்பது, உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவை வழங்குகிறது. அதனால்தான் "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்றார் வள்ளுவர்.

என்கனவு: 
       மக்கள் வாழ்வுக்கு உதவுதானே முக்கியம். இப்படிச் சிந்திக்கிற பொழுது ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு வகையில் மனித வாழ்வுக்கு முக்கியமானதாகவே தெரிகிறது. நைட்டிங்கேல் அம்மையார், ஆல்பிரடு சுவிட்சர், நஞ்சுண்டராவ் முதலானவரின் மருத்துவப்பணி குறித்துப் படித்தவன் நான். எனவே, என்னைப் பொறுத்தவரை, நான் மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவே பெரிதும் விரும்புகிறேன். நான் மருத்துவராக வேண்டும். இதுவே என் கனவு. என் கனவு மெய்ப்பட வேண்டும். எதிர்காலத்தில் நான் சிறந்த மருத்துவராகிச் சமுதாயத்திற்குப் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறேன்.

மருத்துவத் தொழில்:
        நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது உலக வழக்கு! ஆனாலும், சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாக மக்கள் நோய்க்கு ஆளாகின்றனர். நோய்க்கு மூலகாரணமாக இருப்பது அறியாமையே. அறியாமையினால் பரவுகிற சில நோய்கள், சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. மக்களின் அந்த அறியாமையைப் போக்க வழிகாண வேண்டியது மருத்துவரின் கடமையாகும். நோய் வருமுன் காக்கும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவேன்.

என் குறிக்கோள்: 
         நான் மருத்துவரானபிறகு, என் தாய்நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன்; அதிலும் நகரங்களில் தங்கிப் பணிபுரியாமல், வசதியற்ற ஏழை எளிய மக்கள் வாழுகிற கிராமப்புறங்களுக்குச் சென்று தங்கிப் பணிபுரிவேன். சிற்றூர்களில் வாழ்கிறவர்கள்கூட மருத்துவக் கல்வி பயின்றதும், தங்கள் ஊரையும் மக்களையும் மறந்து விடுகின்றனர். நான் அப்படி இல்லாமல் கிராமங்களுக்குச் சென்று, மருத்துவத் தொண்டு புரியவே விரும்புகிறேன்.

கிராம ஆரோக்கியம்:
                கிராமங்களில் வாழும் மக்களின் நோய்க்குமட்டும் மருந்து தராமல், அவர்கள் நோயின்றி வாழவேண்டிய சுகாதார முறைகளையும் எடுத்துக்கூறி நல்வழி காட்டுவேன். உடல்நலம் பேணுவதற்குரிய வழிமுறைகளை எடுத்துச் சொல்வேன். தமிழகத்தில் மக்கள் உண்ணும் உணவே மருந்தாக இருக்கிறது. இது புரியாமல் இருக்கிற மக்களுக்கு, உணவே மருந்தாகும் நெறிமுறைகளை எடுத்துக்கூறிப் பின்பற்ற வைப்பேன். அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் சிற்றூர் மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பேன்.

முடிவுரை
        படித்த இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஒன்று சேர்த்துச் 'சுகாதார வாழ்வு' குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பாமர மக்களுக்குச் சரியான வாழ்க்கை நெறிமுறைகளை அறிவுறுத்தச் செய்வேன். பாமர மக்கள் இன்ப வாழ்வைப் பெற்றால், அங்கே இறைவனைக் காணமுடியும் எனக் கூறுவேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி