உலக அமைதி - கட்டுரை

 முன்னுரை: 
         அமைதியே சமுதாயத்திற்கு நலம் செய்யும் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். கடந்த நூற்றாண்டில் நடந்த இருபெரும் போர்கள், உலகைப் பல வகைகளில் அலைக்கழித்தன. ஆங்காங்கே நடைபெறும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் அமைதியைக் கெடுக்கின்றன. உலகில் போரைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தைக் குறித்து இனிக் காண்போம்.

உலகப் போருக்குக் காரணங்கள்:
                     அமெரிக்க நாடு, முதலாளித்துவக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்சு, மேற்கு ஜெர்மனி முதலிய நாடுகளும் ஆஸ்திரேலியாவும் இவற்றின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தியா முதலான நாடுகளும் அமெரிக்க அணியில் நின்றன. சோவியத் ரஷ்யா, சீனா, போலந்து, செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லோவியா, கிழக்கு ஜெர்மனி முதலானவை ஓரணியில் நின்றன. இந்த இரு பிரிவுகளும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் 'பனிப்போர்' நடத்திக் கொண்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபை: 
        இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற நிலையில், போரால் உலகில் நிகழ்ந்த சிரழிவுகளைக் கண்டு திகைத்த உலக நாடுகளின் தலைவர்கள். 1945ஆம் ஆண்டு ஒன்றுகூடி, 'ஐக்கிய நாடுகள் சபை'யை உருவாக்கினார்கள். ஐ.நா.சபை உலக அமைதிக்குப் பல வகைகளில் பாடுபட்டு வருகிறது. சூயஸ் கால்வாய்த் தகராறு, பாலஸ்தீனத் தகராறு, கொரியப் போர், கியூபா, காங்கோ முதலான நாடுகளில் ஏற்பட்ட மோதல்கள் முதலானவை, பெரிய போர்களாக வெடிக்காமல் தடுக்க, ஐ. நா. சபை செயல்பட்டது. அல்ஜீரியா, சூடான், சைப்ரஸ், கினியா முதலிய நாடுகள், விடுதலை பெற்றுச் சுய ஆட்சி நடைபெற வழிவகுத்தது.

சான்றோர் விரும்பிய அமைதி
                           கணியன் பூங்குன்றனார், "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்பதை முன்வைத்தார். இன்று இத்தொடர், ஐ.நா. சபைக் கட்டடச் சுவரில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதை நம் தமிழ் இனச் சிந்தனையில் உருவெடுத்த கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனலாம். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும், ''கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்" என்று பாடினார்.

 இந்தியாவின் பங்கு:
       ஆசிய நாடுகள், குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகள், உலக அமைதியைப் பெரிதும் விரும்புகின்றன. ஆகவே, இந்தியாவின் தலைமையில், 'அணி சேரா நாடுகள்' என்னும் பிரிவோடு நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்து, உலக அமைதியை நிலைநாட்ட முயன்று வருகின்றன. நேரு வகுத்தளித்த பஞ்சசீலக் கொள்கையில் பிடிப்பு உடையனவாக, அந்நாடுகள் செயல்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளும் இந்த அணியில் சேர்ந்து, உலக அமைதிக்குப் பணியாற்றுகின்றன.

முடிவுரை:
       அண்மைக் காலமாக உலகில் ஒரு பக்கம் இனவெறி தலை விரித்தாடுகிறது; இன்னொரு பக்கம் மதவெறி மக்களைப் பிடித்து ஆட்டுகிறது. 'இன விடுதலை' என்கிற பெயரிலும், 'மதப்பாதுகாப்பு' என்கிற பெயரிலும், 'மக்கள் விடுதலை' என்கிற பெயரிலும் உலகெங்கும், தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது. தீவிரவாதத்தின் ஆணிவேரைக் கிள்ளி எறிய, அமெரிக்கா முயன்று வருகிறது. ஐ.நா. சபையில் இடம் பெற்றுள்ள நாடுகள், தீவிர வாதத்தை ஒழிக்க, ஆதரவுக் கரம் நீட்டிவருகின்றன. அமைதிகாக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி