வ. உ. சி. சிதம்பரனார் - பேச்சுப்போட்டி
தமிழில் பிறந்து
தமிழால் வளர்ந்து
தமிழால் உயர்ந்து
தமிழை உயர்த்திய
தமிழ் சான்றோர்களை வணங்கி
அவையோரே
அதில் இருக்கும் பெரியோரே
இன்றைய சிறியோரே
நாளைய வரலாறே
வருங்கால மேதைகளே
எதிர்கால தேவைகளே
எம் பள்ளி மாணவர்களே
உங்கள் அத்துனை பேரையும் வணங்கி...
பேசப்போகிறேன் என் உரையை துவங்கி...
பிறந்தவர் இறத்தல் பேருலகின் இயற்கை என்றாலும், தியாகத்தால், தொண்டால், நாட்டுப்பற்றால் , தன்னலம் பேணாது பிறர் நலத்தால் புகழ் பெற்று தரணியில் சாகா வரம் பெற்ற சான்றோர்கள் சிலர். இச்சான்றோர் பூத உடம்பு அழிந்தாலும், புகழ் உடம்பால் புகழோடும், பெருமையோடும் என்றும் நிலைபெற்று வாழ்வர். அத்தகைய தியாகச் செம்மல்களுள்
தலைசிறந்து நிற்பவராம்
சீமானாகப் பிறந்தவராம்
கோமானாக வாழ்ந்தவராம்
விடுதலை வேட்கை மிக்கவராம்
வெஞ்சிறையில் இருந்தவராம்
அஞ்சாத நெஞ்சினராம்
தியாகத்தின் திருவுருவாம்
நேர்மையின் இருப்பிடமாம்
உண்மை நெறி நின்றவராம்...
அவர் பெயரை நினைத்தால் வீரம் வரும்,
அவர் தியாகம் நினைத்தால் கண்ணீர் வரும்,
கப்பலோட்டிய காட்டு மரம்,
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்...
வ.உ.சிதம்பரனார் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதன், பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
அந்நியர் பொருட்களை எதிர்ப்பதே விடுதலைக்கு உகந்தது என்று நம்பிய அவர் சுதேசி இயக்கத்தை வளர்த்தார். அயல்நாட்டுத் துணிகளை எரித்தார்; கைத்தொழில் வினைகளுக்குச் சங்கம் அமைத்தார். கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தி உள்நாட்டுப் பொருள்களை வாங்குமாறு மக்களை ஊக்கப்படுத்தினார். தூத்துக்குடியில் படகுகளுக்குச் சங்கமும், பஞ்சாலைத் தொழிலாளர் சங்கமும் அமைத்து அந்நிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தன் பேச்சாலும் எழுத்தாலும் விடுதலை வேள்வித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்தார்.ஆங்கிலேயரின் கடல் வாணிகத்தை ஒழிக்கத் திட்டமிட்ட தலைவர் வ.உ.சி. இரு கப்பல்களை விலைக்கு வாங்கினார். கடல் வாணிபம் செய்யத் தலைப்பட்டார். வெற்றியும் பெற்றுக் கப்பல் ஓட்டிய தமிழன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்.
வீர ஆவேசக் கனலாக வ.உ.சி. மேடைகளில் முழங்கினார்.
“சுதந்திரம் நமது குறிக்கோள்,
வீறு கொண்டு பாரதம் பூரண
விடுதலை எய்தும் வரை ஓயமாட்டோம்!
உறுதியில் தளர மாட்டோம்.
விடுதலை பெறாது உயிர் வாழமாட்டோம்.”
எனச் சூளுரைத்தார்.“அடிமைத் தனத்தை விடவா சாவு அஞ்சுதற்கு உரியது? மரணத்தைக் கண்டு அஞ்சுபவன்தான் கோழை! ஆன்மா அழிவற்றது! நாட்டு விடுதலைக்காக, நாட்டு நன்மைக்காக எவனொருவன் உயிர் துறக்கின்றானோ அவனே இன்ப உலகிற்குச் செல்கின்றான்” என முழங்கினார் ஆனால் வ.உ.சி.யின் வளர்ச்சியைக் கண்ட ஆங்கிலேயர் அவரை சிறைப்படுத்தி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தனர். கோவைச் சிறையிலும், கண்ணனூர் சிறையிலும் வாடித் துன்பமுற்றார். கொடுந்தண்டனைகளான கசையடி பெற்றுக் கல்லுடைத்தார். செக்கிழுத்தார், அவர் சிறையில் அடைந்த துன்பத்தைக் கண்ட பாரதியார் 'மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ' என்று இறைவனை நோக்கிப் பாடினார்.
அந்நியர் விடுதலைக்கு அயராதுழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சி தமிழ்த்தாய்க்குத் தொண்டாற்றவும் மறக்கவில்லை. தொல்காப்பிய இலக்கண நூலைப் பதிப்பித்தார், தமிழ் மறையாம் திருக்குறளுக்கு உரையெழுதினார். இவர் சிறந்த நூலாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
சிதம்பரனார் மரபு வழியாலும் மாண்பார் முயற்சியாலும் தமிழ் மொழியில் பெரும்புலமை பெற்றார்; சோழவந்தான் அரசஞ்சண்முகனார் போன்ற புலவரைச் சார்ந்து தொல்காப்பியத்தைக் கசடறக் கற்றார்; மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்து, பல நூல்களைக் கற்றுச் ‘சங்கப் புலவர்’ எனும் சிறப்பையும் அடைந்தார். சிறையில் அடைபட்டபோதும் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து கற்றார் என்பதைச் தன்னுடைய சுயசரிதை’யில்…
“வள்ளுவர் மறையும் மாண்புயர் நல்லாப் பிள்ளை பாரதமும் பெரும்பொருள் நிரம்பிய
பகவத் கீதையும் படித்தோம்…”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்காக, மொழிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அயராதுழைத்த கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் அய்யாவை எந்நாளும் நினைவு கூர்வது நம் கடமை...
பேசுவதும் எழுதுவதும் நன்மைக்காக
பெருமை பெற்றால் அது உதவும் நாட்டுக்காக,
ஆறறிவு கொண்டது எதற்காக
ஆய்ந்து பார்க்கணும் அதற்காக
பிற உயிர் பேணுவோம் பரிவாக
பெருமைகள் புரிவோம் பெரிதாக
வ.உ.சி. பற்றி பேசுவதற்காக
வாய்ப்பு கிடைத்தது வரமாக
பயன்படுத்தினேன் சரியாக
நன்றி கூறுகிறேன் முறையாக
வணங்கி முடிப்பதே தமிழின் அறம்
வணங்குவது என் இரு கரம்
விடை பெறுகிறேன் என் பேச்சை நிறுத்தி
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி செலுத்தி
உலகம் உள்ள நாள் வரைக்கும்
கப்பலோட்டிய தமிழனின் புகழ் மணக்கும்.
நன்றி.
ஜெய்ஹிந்த் ...
கருத்துகள்
கருத்துரையிடுக