பேச்சுப்போட்டி - சுதந்திர போராட்ட தியாகிகள்
இக்கல்விச் சாலையின்
தலைமை ஆசிரியர் அவர்களே,
ஆணிவேர்களே,
ஆசிரியப்பெருமக்களே,
வருங்கால தங்கங்களே,
எதிர்கால சிங்கங்களே,
ஐம்பூதங்களே,
நான்மறை வேதங்களே,
எம் சொந்த பந்தங்களே,
கட்டிக் கரும்பே,
கருப்பட்டி இனிப்பே,
விண்ணை அளந்த
என் அன்னை தமிழே......
உங்கள் அனைவரையும் என் சிரம் தாழ்ந்து வணங்கி என் உரையை துவங்குகிறேன் தாருங்கள் தங்கள் கவனங்களை....
சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளை பற்றி தான் இங்கு பேச வந்துள்ளேன்.
வாணிபம் என்ற பெயரால் இந்தியத் திருநாட்டில் நுழைந்து நமது இயற்கைச் செல்வங்களை எல்லாம் கபளீகரம் செய்யும் நோக்கத்துடன் தங்கள் படைபலத்தைக் கொண்டு நம்மை அடிமைகளாக்கி இந்திய மக்களையும் அதன் தலைவர்களையும் கொன்று குவித்த ஆங்கிலேயர்களின் செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை எதிர்த்துப் போராடியதே இந்திய சுதந்திரப் போராட்டம்.
திருநெல்வேலி காட்டாங்குளம்
சீமையின் ராஜா மாவீரன் அழகு முத்துகோன் வரிகொடுக்க மறுத்த காரணத்தால் ஆங்கிலேயரின் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதும், புரட்சி வீரன் பூலித்தேவன் வரிகொடுக்க மறுத்ததால் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் அல்லல் பட்டதும், வரி கொடுக்க மறுத்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டதும், சிவகங்கைச் சீமை மருதுபாண்டிய சகோதரர்கள் சின்ன மருது, பெரியமருது இருவரையும் 1801ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தூக்கிலிட்டதும், இந்திய சரித்திரத்தின் கறுப்பு நாட்களல்லவா?
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்தும், வரிகோடா இயக்கத்தில் கலந்து கொண்டதற்காகவும் அண்ணல் காந்தியடிகளுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை,
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தாலும் நாட்டு விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறைக்கொடுமை அனுபவித்த நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு.
மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக பஞ்சாப் சிங்கம் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட கொடுமை இந்திய மக்களின் ஆவேசத்திற்கு அடிகோலியது. கோபாலகிருஷ்ண கோகலே! இரும்பு மனிதர் சர்.வல்லபாய் படேல்! கர்மவீரர் ஏழைப்பங்காளர் காமராஜர்!,
கோவை சிறையில் வாடி அங்கே மாடுகளுக்குப் பதிலாக செக்கிழுத்த
வ.உ.சிதம்பரம் பிள்ளை,
தனது எழுத்துக்களாலும் கவிதைகளாலும் தீவிரமான நாட்டுப் பற்றை உருவாக்கிய மகாகவி சுப்ரமணிய பாரதியார்!, தொழுநோயை சிறைகொடுத்தப் பரிசாக எண்ணி வெளியே வந்த சுப்பிரமணிய சிவா, மடிந்துவரும் நிலை வரினும் தடியடிகளைத் தாங்கி கையேந்திய எனது கொடியைக் கீழே விழாமல் காத்து நிற்பேன் என்ற திருப்பூர் குமரன், கொடூரன் கலெக்டர் ஆஷ்துரையைக் கொன்று தன்னையே சுட்டுக்கொண்ட வாலிபன் வாஞ்சிநாதன், இந்திய தேசிய இராணுவத் தளபதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இன்னும் ஆங்கிலேயர்களின் தோட்டாக்களினால் இரத்தம் சிந்திய லட்சக்கணக்கான தியாக பெருமக்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு தாங்கள் செய்த தியாகங்களை எப்படி மறக்க முடியும்.
ஆணுக்குப் பெண் நிகரில்லை என்பது போல் 1780 ஆம் ஆண்டு தன் படையை வைத்து ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை வென்ற ஒரே பெண்மணி வேலுநாச்சியார்,
தனது சொத்தை விற்று சுதந்திரப் போராட்டத்திற்கு செலவிட்டு 'தென்னகத்தின் ராணி' என காந்தியால் அழைக்கப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாள், உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற முதல் பெண் ருக்மணி லட்சுமிபதி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் பிறந்த குழந்தையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.என் சுந்தராம்பாள், சிறை சென்றாலும் சிறைச்சாலையை கல்விச்சாலையாக மாற்றி அங்குள்ள பெண்களுக்கு கல்வி வழங்கிய அம்புஜத்தம்மாள், இவர்கள் மட்டுமல்லாது மதுரை சொர்ணத்தாம்பாள், மதுரை கே.பி ஜானகி அம்மாள், பத்மாசனி அம்மாள், லட்சுமி கௌல், லீலாவதி போன்றோரின் பங்கும் போற்றுதலுக்குரியது.
இந்தியத் திருநாடு சுவைமிக்கப் பெரிய தேன்கூடு. இந்தத் தேன்கூட்டில் தேன் என்ற நமது இயற்கை வளங்களை தங்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்று உரிமை கொண்டாடி தங்கள் வசமாக்கிக் கொள்ள அவர்கள் செய்த சதியினை முறியடித்து அவர்களை நம் நாட்டை விட்டு வெளியேற்றவே நடந்ததுதான் இந்திய சுதந்திரப் போராட்டம். அவர்களால் சீர்குலைந்த இந்திய தேசம் என்ற அந்த தேன்கூட்டைத் திரும்பவும் சீராக்கி சுதந்திரம் என்றத் தேனை நமது இந்திய மக்கள் சுவைத்திட வேண்டும் என்று நடந்ததுதான் இந்திய சுதந்திரப் போராட்டம். இந்த தேன்சுவை என்ற நமது செல்வங்களை மீண்டும் தேன்கூடு என்ற நமது நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் நடத்திய அதிரடிச் செயல்கள் தான் இந்திய சுதந்திரப் போராட்டம்.
இந்திய சுதந்திர வரலாறு இந்திய மக்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு மகா காவியம் என்றால் அது மிகையில்லை. வருங்காலச் சந்ததியர்களின் நல்வாழ்வுக்கு தங்கள் இன்னுயிரை நீத்த மக்களின் வரலாறுதான் இந்திய சுதந்திரப் போராட்டம். சுதந்திரம் ஒன்றே தங்கள் வாழ்வின் இலட்சியம் என்ற தத்துவத்தை வாழ்வின் குறிக்கோளாக கொண்டு மரணத்தைக் கண்டும் அஞ்சாமல் துணிவுடனும் துடிப்புடனும் போராடி தங்களது உயிர்களை நீத்த தியாகளை நாம் வணங்குவது நம் அனைவரின் கடமை.
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.
வாழ்க இந்திய மக்கள்!
வளர்க இந்திய தேசம்!!
பூவென்றால் மணக்கும்,
தேன் என்றால் இனிக்கும்,
அதிகம் பேசினால் ஏற்படும் சுனக்கம்,
பேசி முடிக்கிறேன் வணக்கம்...
கருத்துகள்
கருத்துரையிடுக