பழந்தமிழர் பண்பாடு
முன்னுரை:
'தமிழ்'. மிகப் பழைமையான உயர்தனிச் செம்மொழி, தமிழைப் பேசிய 'தமிழ் இனம்'. அம்மொழியினும் தொன்மையானது. அப்பழைமையான தமிழ் இனத்தின் பண்பாட்டையும், பெருமையையும் கற்போர் அறிவர். இனித் தமிழரின் பழைமையான பண்பாடு பற்றிக் காண்போம்.
பண்பாடு:
பண்படுத்துவது என்பதனால், உருவாவது பண்பாடு ஆகும். மனிதன் பண்பட, அவன் உள்ளம் பண்பட வேண்டும். மனித உள்ளம் பண்படுவது என்பது, பெரும்பாலும் அவன் கற்கும் கல்வியால் எனலாம். கல்வி என்பது இன்று உள்ளதுபோன்ற ஏட்டுக்கல்வி மட்டும் அன்று; 'நாகரிகம்' என்பது மக்களின் திருந்திய வாழ்க்கை ஆகும். 'பண்பாடு' என்பது திருந்திய ஒழுக்கமாகும். சுருக்கமாகக் கூறுவதானால், 'உள்ளத்தின் செம்மையே பண்பாடு ஆகும். பண்பாடு நாகரிகத்தினும் சிறந்ததாகும்.
பண்பாட்டுச் சிறப்பு:
'பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' எனக் கலித்தொகை, பண்பாட்டுக்கு இலக்கணம் கூறுகிறது. அதாவது, உலக வழக்கம் அறிந்து ஒழுகுதலே பண்பாடாகும். பெருமை, சான்றாண்மைக் குணங்களைப் பெற்றவருக்கு இது இயலும். எனவே, பண்டைத் தமிழர் இப்பண்புகளைப் பெற்றிருந்ததும், பண்பாட்டில் சிறந்திருந்ததும் விளங்கும். பண்பாடு என்பது. உள்ளத்து உணர்வின் அடிப்படையில் அமைவதாகும். அது பல்வேறு நல்லியல்புகளின் தொகுப்பாகும். அது பெரும்பாலும் சொல்லாலும் செயலாலுமே வெளிப்படுவதாகும். பழந்தமிழர் பண்பாடு, தனிச் சிறப்புடையதாகும்.
வாழ்க்கை முறை:
பண்டைத் தமிழர் இல்வாழ்க்கையை உயர்வாகப் போற்றினர். அதனால் இல்லறம் தழைத்திருந்ததாகத் தெரிகிறது; மகளிர் வீரமுடைய ஆண்களையே மணக்க விரும்பினர். எனவே, ஆண்மக்கள் வீரமுடையோராகவே விளங்கியுள்ளனர். வீரர்களை மணக்க விரும்பிய பெண்டிரும், தம் மக்களை வீரமுடையோராகவே வளர்த்தனர்; வீரமிலா மகனைப் பெறுவதை இழிவெனக் கருதினர். போர்க்களம் சென்று விழுப்புண் பெறாத நாளை, ஆண்கள் வீணே கழிந்த நாளாகவே எண்ணினர். மகன் போர்க்களத்தில் விழுப்புண்ணுடன் வீழ்ந்துபட்டான் என்பதையே உயர்வாகக் கருதினர்.
மானமே பெரிது:
தமிழர் மானத்தை உயிரினும் மேலாகப் போற்றினர். 'மானம் இழந்தபின் வாழாமை முன்இனிதே' என வாழ்ந்தமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னன். பொதுவாகத் தமிழ்ச் சான்றோர், மானத்தை இழக்கும் நிலை ஏற்பட்டபோது, உயிரை விடுத்து மானத்தைக் காத்தனர்.
முடிவுரை:
பண்டைத் தமிழர், தம் சுற்றத்தை மட்டுமன்றி, எல்லாரையும் தம் உறவினராகவே கருதினர்; எந்த நாட்டையும் தம் நாடாகவே போற்றினர்; எல்லாரும் வாழவேண்டும் என்கிற உயரிய பண்பைப் பாதுகாத்தனர்; தேவாமிருதமாயினும், விருந்தினரோடு பகிர்ந்துண்டனர்; அஞ்ச வேண்டியவற்றிற்கு மட்டுமே அஞ்சி வாழ்ந்து, பொதுவாக அச்சமிலாது இருந்தனர்; பிறருக்குப் பயன்பட வாழ்ந்தனர்; உயரிய பண்பாட்டைக் கடைப்பிடித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக