பசுமைப் புரட்சி - கட்டுரை
முன்னுரை:
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்"- என்ற பாரதியின் குறிக்கோள் நிறைவேறப் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி பெருகவில்லை. அதற்கு நடத்தும் விவசாயப் புரட்சியே பசுமைப் புரட்சி எனப்படும்.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்"- என்ற பாரதியின் குறிக்கோள் நிறைவேறப் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி பெருகவில்லை. அதற்கு நடத்தும் விவசாயப் புரட்சியே பசுமைப் புரட்சி எனப்படும்.
பசுமைப் புரட்சி:
உணவுப் பிரச்சினையைத் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது. அதன் முக்கிய நோக்கம் உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயத்தை ஊக்குவித்தலாகும். இதற்கு நீர்ப்பாசனம் நன்கு கவனிக்கப்பட்டது. பல்நோக்குத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நாடு வளம் கொழிக்கப் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்ப் பாசன வசதியைப் பெருக்கியது. பக்ராதங்கல், தாமோதர், ஹீராகுட், துங்கபத்திரா, நாகார்ச்சுனா போன்ற அணைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பவானிசாகர், மணிமுத்தாறு, அமராவதித் திட்டம் போன்ற திட்டங்களை உருவாக்கியது.
அரசுத் திட்டங்கள்:
விவசாய முன்னேற்றத்திற்கு நமது அரசு பல முறைகளைக் கையாளுகின்றது. புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் பலவும், புதிய கால்வாய்களும், பாசனக் கிணறுகளும் வெட்டப்பட்டு உள்ளன. விவசாயம் பெருகத் தீவிர சாகுபடி முறை,பரந்த நிலசாகுபடி, கூட்டுப் பண்ணை முறை முதலியன பின்பற்றப்படுகின்றன. சிதறிக் கிடக்கும் சிறு நிலங்களிலும் தீவிர சாகுபடி முறை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய சாகுபடி முறை தீவிர சாகுபடி முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விவசாயக் கடன்:
கூட்டுறவு வங்கிகள், நிலவளங்கள் மூலம் நமது அரசு கிணறுகள் தோண்டவும், மின்விசை நீர்ப்பொறி பெறவும் பெருந் தொகைக் கடன்கள் வழங்கி வருகிறது. குறுகிய காலக் கடன்கள் மூலம் நெல், வாழை, கரும்பு, பயறுகள், மிளகாய் போன்ற பலவகைப் பயிர் வளர்ச்சிக்குக் கடன் வழங்கி உழவர்களை ஊக்குவிக்கிறது.
ஆராய்ச்சி:
நிலத்தடி நீரை வெளிக்கொணர ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறது. மண்வளப் பாதுகாப்பு மூலம் மண்ணுக்கு ஏற்ற புதிய உரவகைகள், பூச்சி கொல்லிகள், விதைகள் வழங்கப்படுகின்றன. உரத்தின் அளவைக் கணித்துக் கொடுக்கிறது. பெரும்பாலான நிலங்களில் இருபோக, முப்போக சாகுபடி நடைபெறுகின்றன. அதிக விளைச்சல் தரும் ஐ.ஆர். 8, ஐ.ஆர். 20, பொன்னி முதலிய நெற்பயிர் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காய்,கனி எண்ணெய் வித்துகள் உற்பத்திக்குத் தனி வாரியம் அமைந்து வளப்படுத்தப்படுகிறது.
நமது கடமை:
நம் நாட்டில் இன்னும் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றையும் விளை நிலங்களாக மாற்றி உணவு உற்பத்திப் பெருக்கம் ஏற்படச் செய்ய வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறக் கூடிய நிலையில் இல்லை. இந்திய விவசாயிகள் தோட்ட வேலையிலும் ஈடுபடுதல் அவசியமாகின்றது. வறட்சி காரணமாகப் பசுமைப் புரட்சி தடைப்பட்டுள்ளது.
முடிவுரை:
உணவுப் பிரச்சினை தீரப் பசுமைப் புரட்சியே நற்பயன் அளிக்கும் திட்டமாகும். ஆகவே அரசும், மக்களும் சேர்ந்து உழைப்பதன் மூலம் நம் நாட்டை உலக அரங்கில் முன்னணியில் கொண்டுவர முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக