செய்தித்தாள் - கட்டுரை

 முன்னுரை:
          காலையில் எழுந்ததும் செய்தித்தாள் படிப்பது என்பது நம் பழக்கங்களுள் ஒன்றாகிவிட்டது. உள்ளூர்ச் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்தையும் தாங்கி வரும் நண்பன் செய்தித்தாள். ஒருநாள் செய்தித்தாள் படிக்கவில்லையெனில் நாம் தவித்துப் போகிறோம். அதனால் சிறந்த நண்பன் செய்தித்தாள்.

செய்தித்தாள்களின் வகை:
           செய்தித்தாள்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நாளிதழ் (Newspaper) மற்றொன்று இதழ்கள் (Magazine) நாள்தோறும் காலையிலும் மாலையிலும் வரும் செய்தித்தாள்கள் நம் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பற்றிக் கொள்கின்றன. தமிழிலும் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் செய்தித்தாள்கள் வரக் காண்கிறோம்.செய்தித் தாள்களில் வார இதழ், திங்கள் இதழ். திங்களிரு முறை இதழ் எனப் பலவகை உண்டு. இவையும் செய்திகளைச் சொல்வனவே. செய்தித்தாள்களில் அன்றாடச் செய்திகள் இருந்தால் வார, மாத இதழ்களில் செய்திகளின் தொகுப்பாக அமைந்து இருக்கும். சிறுகதைகள், தொடர்கதைகள், அறிவியல் கட்டுரைகள், விளையாட்டுச் செய்திகள், விளம்பரங்கள், வானொலி நிகழ்ச்சிகள், மக்கள் கருத்துகள், ஆசிரியரின் தலையங்கம் வானிலை அறிவிப்புகள், அரசு அறிவிப்புகள் ஆகிய அனைத்தையும் தாங்கி வருவதால் மக்கள் பெரிதும் நன்மை அடைகின்றனர்.

வளர்ச்சி:
        செய்தித்தாள் முதன்முதல் சீனாவிலிருந்தும், பின்னர் வெனிசிலிருந்தும் வெளிவந்தன. இந்தியாவில் முதன்முதல் கி.பி. 1780இல் 'பெங்கால் கெசட்' என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் கி.பி. 1931இல் 'தமிழ்' என்ற பத்திரிகை கிறித்துவ சங்கத்தாரால் வெளியிடப்பட்டது.

செய்தித்தாள் என்பது:
          ஆங்காங்கு நிகழ்ந்த செய்திகளை நிகழ்ந்தது நிகழ்ந்த படியே சொல்வதாகும். செய்திகளைத் திரட்டி உலகெங்கும் வழங்க டாஸ். இராய்டன், இந்துஸ்தான் சமாச்சார் போன்ற செய்தி உள்ளன. செய்திகள், செய்தி நிறுவனங்களுக்குக் கிடைக்கத் தொலைபேசி, வானொலி, டெலிபிரிண்டர், செயற்கைக்கோள் போன்ற விஞ்ஞானக் கருவிகள் பயன்படுகின்றன. பத்திரிகை ஆசிரியர்கள் செய்திகளை ஒழுங்குபடுத்தி அச்சிட்டு விரைவில் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். செய்தித்தாள்கள் செவ்வனே இயங்க வேண்டுமாயின் வீணான வதந்திகளையும் கீழான கதைகளையும் வெளியிட்டுச் சமூகத்தைச் சீரழிக்காமலிருக்க வேண்டும். நல்லவை - அல்லவை அனைத்தும் அறியப்பட்டு மக்களாட்சி மலரக் காரணமாக அமைய வேண்டும். செய்தித்தாள்களின் கடமை பெரிது. அவை உலக மக்களை ஓரினமாக்க முயற்சிக்க வேண்டும். மக்கள் வாழ்வாங்கு வாழவும் சமுதாயச் சீர்கேடுகளை அழிக்கவும் வழிகாட்ட வேண்டும்.

முடிவுரை:
        செய்தித்தாள் படிக்கும் பழக்கம் சிறந்த பழக்கம். இதனை இளமை முதலே மேற்கொள்ள வேண்டும். பத்திரிகைகளைப் படித்துக் காலத்துக்கேற்ற மக்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்குச் செய்தித் தாள்கள் உறுதுணையாக அமைதல் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி