காமராஜர் கட்டுரை 2

முன்னுரை
           அயராது பொதுநலத்தொண்டை மேற்கொண்டு, கல்வியும் செல்வமுமின்றி உழைத்து ஒருவர் உயர்ந்தார்! எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒருநிலைக்கு உயர்ந்தவர் அவர் ஒருவரே! அவர்தாம் காமராசர். 'கர்மவீரர்," 'படிக்காத மேதை', 'கல்விக்கண் திறந்தவர்', 'ஏழைப் பங்காளர்' என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டார்.

பிறப்பும் வளர்ப்பும்:
           விருதுநகரில் எளிய குடும்பத்தில், குமாரசாமி -சிவகாமி தம்பதியரின் மகனாக 15.07.1903இல் பிறந்தார்; இளமையிலேயே தந்தையை இழந்தார். ஆறாம் வகுப்புடன் அவர் கல்வி முடிவுற்றது. வறுமை காரணமாக. வேலைக்குச் சென்றார். எனினும் மனம் தாய்நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலைபற்றி அறிந்தபின், அவர் காங்கிரசு பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்; காந்தியடிகளின் தொண்டரானார்; சத்தியமூர்த்தி ஐயாவைத் தம் அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டார்; தொண்டால் சிறந்து, தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். பலவேறு நூல்களைக் கற்றுப் பல்துறை அறிவைப் பெற்றுச் சிறந்த நிர்வாகியாகப் பணியாற்றினார்.

தொண்டும் தூய்மையும்:
          காங்கிரசு இயக்கத்தில் அடிமட்டத்தொண்டராக
வாழ்வைத் தொடங்கினார்; படிப்படியாகத் தம் தொண்டால் உயர்ந்தார்; தமிழக முதல்வராகவும் பணியாற்றினார்; அனைத்திந்திய காங்கிரசின் தலைவரானார்; அரசியலில் இளைய தலைமுறைக்கு வழிவிடத் திட்டம் தீட்டினார். ஏடுகள், உலக நாடுகள் பல, இச்செயலைப் பாராட்டிக் `காமராசர் திட்டம்' என்று பெயரிட்டன. பிரதமர் நேருக்குப்பின் யார் பிரதமராவார்?' என்ற குழப்பத்திற்கு விடை கண்டார். இலால்பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார். சாஸ்திரியின் திடீர் மறைவால், இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார்.

எளிமையும் இனிமையும் :
          அவர் அணிந்த நான்கு முழம் வேட்டி, அரைக்கைச் சட்டை, துண்டு ஆகிய எல்லாமும் கதர்தான். அவர் உடுத்தது. எளிமையான உடை; உண்டது, எளிமையான உணவு; உறைந்ததும், எளிமையான வீடு! எல்லாரிடமும் இனிமையாகப் பேசினார்; இன்முகம் காட்டி வரவேற்றார். யாரையும் புண்படுத்தாத உள்ளம் அவர் உள்ளம். இவை எல்லாம் அவருக்கு, மக்கள் மனத்தில் தனியிடம் தேடித் தந்தன. பதவி வகித்த காலத்தில் யாருக்கும் எதற்கும் வளையாது வாழ்ந்த நேர்மை அவரிடம் காணப்பட்டது. இந்த நேரிய உள்ளம் நடத்திய ஆட்சி, அதிகாரிகளிடம் அவர்தம் மதிப்பைக் கூட்டியது. அவர் காலத்தில் தமிழ் நாட்டில் பல அணைகளைக் கட்டி, விவசாயத்தைப் பெருக்கினார். மின் உற்பத்தியைப் பெருக்கிக் கிராமப்புறங்களில் வெளிச்சத்தைப் பரப்பியதோடு, நீர்ப்பாசனத்திற்கும் வழிசெய்து, தொழிற்பேட்டைகளை அமைத்துப் பல்வகைத் தொழில்கள் வளர, மலர வழிசெய்தார். பள்ளி இறுதி வகுப்புவரை தமிழ்நாட்டில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

முடிவுரை:
       எளிமை, இனிமை ஆகிய பண்புகளால் எல்லாரையும் கவர்ந்தார்;தொண்டால், தூய்மையால் உயர்ந்தார்; 'தென்னாட்டுக் காந்தி' எனவும், 'கருப்புக் காந்தி' எனவும் போற்றப்பெற்றார். அரும்பெரும் தலைவரான காமராசர், காந்தியடிகளின் பிறந்த நாளிலேயே புகழுடம்பு எய்தினார். உலகம் உள்ள நாள் வரைக்கும் காமராஜர் புகழ் நிலைத்திருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி