ஆசிரியர் தினம் -கட்டுரை
முன்னுரை:
'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்பது, ஆன்றோர் முதுமொழி. கல்வி கற்பிக்கும் ஆசிரியர், இறைவனுக்கு ஒப்பானவர். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆசிரியர்தின விழா கொண்டாடப்படுவதன் அடிப்படையை இனி காண்போம்.
ஆசிரியர் விழா நாயகர்:
சுதந்திர இந்தியாவின், இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுப் பணியாற்றியவர், டாக்டர் இராதாகிருஷ்ணன். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர்க் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். தத்துவ மேதையான டாக்டர் இராதாகிருஷ்ணன், தம்மை ஆசிரியர் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்; குடியரசுத் தலைவராக இருந்தபோதிலும், தாம் 'ஓர் ஆசிரியர்" என்பதில் பெருமை கொண்டவர். அதனால் இவர் தமது பிறந்த நாளை, 'ஆசிரியர் தின'மாகக் கொண்டாட விரும்பினார். இவர் விருப்பப்படி, இவரது பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.
டாக்டர் இராதாகிருஷ்ணன்:
இவர் திருத்தணிகையில் பிறந்தவர்; சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர்; சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர்; பின்னர், மைசூர்ப் பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்ற வருமாறு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக் கல்கத்தா செல்லப் புறப்பட்டார். மாணவர்கள் தம் ஆசிரியரைச் சாரட்டுவண்டியில் அமர்த்தித் தாங்களே தொடர்வண்டி நிலையம்வரை இழுத்துச்சென்று, பிரியாவிடை கொடுத்தனர். இந்நிகழ்ச்சி, இவரிடம் மாணவர்கள் வைத்திருந்த பேரன்பை விளக்குகின்றதன்றோ! இந்நிகழ்ச்சி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த 'நல்லாசிரியர்' என்பதை விளக்குகின்றது. 'நல்லாசிரியர்' என்பவர், தம்மிடம் பயில்பவர்க்கு நண்பராக இருப்பர்; அறிவுரை வழங்குவதில் தத்துவப் பேரறிஞராகத் திகழ்வர்; பார்வைக்குப் பணியாளர்போல் தோன்றுவர்; பண்பிலே தெய்வமாக விளங்குவர். இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டே, இவரது பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா, ஆசிரியர் சமுதாயத்திற்கே பெருமை சேர்க்கிறது. அந்த நாளில் மாநில, மைய அரசுகள், இந்திய நாட்டில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, 'நல்லாசிரியர்' விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசு இவ்விருதை, ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது' என வழங்கி வருகிறது.
முடிவுரை:
டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்ந்த இல்லம், சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது. அந்த வீடு அமைந்துள்ள சாலை, இவர் நினைவாக 'டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த இல்லத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும்கூடி, ஆசிரியர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி, இவர் பெருமையைப் பறைசாற்றி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக