சாலை பாதுகாப்பில் மாணவர் பங்கு- கட்டுரை
முன்னுரை:
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவனின் வாக்குக்கேற்ப, ஆபத்து வருவதற்கு முன்பே காத்துக் கொள்வதே மெய்யான அறிவாகும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன உலகில், மனிதனின் பயணங்களை விரைவுபடுத்த அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள், இன்றைக்கு மனித உயிரைக் குடிக்கும் குருதிப் பாதைகளாக மாறிவருவது வேதனைக்குரிய உண்மை. "பாதுகாப்பான பயணம் - இன்பமான வாழ்க்கை" என்பதை உணர்ந்து, விபத்தில்லா பாரதத்தை உருவாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு மாணவர்களாகிய நம் கரங்களில்தான் உள்ளது.
சாலை விபத்து:
உலகளவில் சாலை விபத்துகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதும், அதில் பலியாகும் ஆயிரக்கணக்கான உயிர்களில் பெரும்பாலோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் மாணவர்களுமே என்பதும் நாட்டின் எதிர்காலத்திற்கே பெரும் சவாலாகும். "வேகம் தருமே தற்காலிகக் இன்பம் ,ஆனால் விபத்து தருமே வாழ்நாள் துன்பம்!" மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், தலைக்கவசம் அணியாமை, இயர்போன் மாட்டி கவனச்சிதறலோடு வாகனம் இயக்குதல் ஆகியவை மனித உயிர்களைப் பலிவாங்கும் முக்கியக் காரணிகளாகும். இந்த அவல நிலையை மாற்றிட மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சுய ஒழுக்கமும் கடமையும்:
மாற்றத்தை எப்போதும் நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும். பதினெட்டு வயது பூர்த்தியடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் எக்காரணத்தைக் கொண்டும் வாகனங்களை இயக்க மாட்டேன் என்ற சுய ஒழுக்கத்தை ஒவ்வொரு மாணவனும் வளர்த்துக் கொள்ள வேண்டும். "தலைக்கவசம் சுமையல்ல, அது உன் குடும்பத்தின் நம்பிக்கைச் சுமை!" என்பதை உணர்ந்து இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிவதையும் கடமையாகக் கொள்ள வேண்டும். மேலும் ரேசிங், சாகசப் பயணம், செல்ஃபி மோகம் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாமல் வேகக் கட்டுப்பாடு காக்க வேண்டும்.
சமுதாய விழிப்புணர்வு:
ஒவ்வொரு மாணவனும் தன் குடும்பத்தின் முதல் விழிப்புணர்வுத் தூதுவனாக மாற வேண்டும். "அப்பா தலைக்கவசம் போடுங்க, அண்ணா அலைபேசி பேசாதீங்க" என்று தன் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு அன்போடு உணர்த்த வேண்டும். சமுதாய அளவில், பள்ளிகளில் இயங்கும் சாலை பாதுகாப்புப் படை (RSP), நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) ஆகியவற்றில் மாணவர்கள் இணைந்து, பாதசாரி கடக்கும் வழியைப் பயன்படுத்துதல் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மதித்தல் பற்றிய விழிப்புணர்வுகளைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரமான 'தங்க மணிநேரத்தில்' காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து உயிரைக் காக்கும் நற்பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முடிவுரை:
"விதியை மதித்தால் உன் விதி நீளும்!" சாலைப் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் வெறுமனே சட்டப் புத்தகம் அல்ல, அது மனித உயிர்களின் பாதுகாப்பு ஆவணம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரனைப் போல, நாட்டின் சாலைகளில் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்யும் காவல் அரண்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும். விதிகளைக் கற்போம், விபத்துகளைத் தவிர்ப்போம், பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பாதுகாப்போம்! வாழ்க பாரதம், வளர்க சாலைப் பாதுகாப்பு!
கருத்துகள்
கருத்துரையிடுக