புத்தகம் பேசுகிறேன்- பேச்சுப்போட்டி
சிந்திக்க வைக்கும் சாதனம்,
சிதறாத அறிவின் ஆவணம்,
எந்துணையாவது புத்தகம்,
யாவருக்கும் கிட்டுமே வித்தகம்!
உங்களின் அன்றாடப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சில மணித்துளிகள் நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
நண்பர்களே! நீங்கள் இந்த மண்ணில் என்றைக்கு பிறந்துவிட்டீர்களோ, அன்றே இறப்பு என்பது உறுதியாகிவிடும். ஆனால், இந்த மண்ணில் இறப்பு என்றில்லாத ஒரே படைப்பு, நான் மட்டும்தான். தலைமுறைகளைக் கடந்தும், தலைமைப் பொறுப்பை ஏற்று, உங்களைத் தகுதிப்படுத்தும் ஆற்றல் எனக்குண்டு.
நான் காலத்தால் அழியாத காவியம். ஜாதி, சமயம் எனக்குத் தெரியாது. நான் சமத்துவத்தை விரும்புவேன். கடல், நாடு, கண்டம் கடந்தும், பாஸ்போர்ட், விசா எதுவுமின்றி பயணிக்கும் உரிமை எனக்குண்டு. அனைத்து மொழிகளிலும் என் அவதாரம் இருக்கும்.
நான் வாழ வழிகாட்டுவேன்;
வசந்தத்தைச் சுற்றிக் காட்டுவேன்;
வையத்தைக் காத்து நிற்பேன்.
நண்பர்களே! நான் ஓலைச்சுவடியில் ஆரம்பித்து, காகிதத்தால் கட்டமைக்கப்பட்டு, இன்று இணையத்திலும் இணைந்துள்ளேன். என்னுள் இல்லாத எதுவுமே இல்லை என்பதற்கு இதுவே நிரூபணம். நீங்கள் எது கேட்டாலும், அது என்னிடத்தில் இருக்கும்.
வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் — இப்படிப்பட்ட நிகழ்வுகளைச் சுற்றியே மனித சமூகத்தின் வாழ்வுகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் என்னிடத்தில் தீர்வு உண்டு.
வெற்றி பெற்றவன் என்னை வாசித்துப் பழகியிருப்பான். தோல்வியடைந்தவன் என்னை வாசிக்க மறந்திருப்பான். வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவன் என்னைத் தேடிக்கொண்டிருப்பான்.
நான் ஒரு கோவில். எனது கருவறைப் பக்கங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். என்னைத் தொட்டு வணங்கிக் கொள்பவர்கள் யாரும் கெட்டுப்போவதில்லை.
வாழ்க்கை என்பது வசந்தம் மட்டுமே இருக்கும் பூந்தோட்டமல்ல. அங்கே கல்லும் இருக்கும்; முள்ளும் இருக்கும். ஏன் என்று கேட்க யாரும் இருக்கமாட்டார்கள். ஏழ்மையும் வறுமையும் உனக்கு வழிவிடாமல் பிடித்துவைத்திருக்கும்.
எதிலும் நீ எப்படி வெளியேறுகிறாய் என்பதில்தான் உன் வெற்றி இருக்கிறது. அதற்கான வாசல் என்னிடம் மட்டுமே இருக்கிறது. வந்து போக உனக்கு மனம் இருந்தால், ஒருமுறை என் கருவறை வாசலை உற்றுப்பார். உனக்குள் ஒளிவட்டம் தோன்றுவதை நீ உணர்வாய்.
என்னை வாசித்துப் பார். உன் சுவாசக்காற்றுகூட என்னைப் பற்றிப் பேசும்.
கரையான் அரித்துத் தின்னும் காகிதமல்ல நான். உங்கள் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றித் தரும் கலங்கரை விளக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அதனால்தான் வாழ்ந்து மறைந்தவர்கள் என்னை வாழ்த்திவிட்டுச் சென்றனர். வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.”
என்று என்னை வாழ்த்தி மறைந்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவன்.
ஆம், நண்பர்களே! என்னை தினமும் வாசித்துப் பாருங்கள். உங்கள் அறிவை அள்ளிக் கொடுப்பேன்.
இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் பிறந்த தினத்தை, அவர் பெயர் தாங்கிய உலக புத்தக தினமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டேன்.
சிக்மண்ட் பிராய்ட் என்னும் உலகியல் அறிஞர், “உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதிற்குப் பயிற்சி புத்தக வாசிப்பு” என்று உலகிற்கு எனது பெருமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு புத்தகம் என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
அறிஞர் அண்ணாவோ, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தான் வாசித்த புத்தகத்தில் இன்னும் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால், அறுவைச் சிகிச்சையைத் தாமதப்படுத்தினார்.
“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டபோது, “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று என்னைத் தாங்கிப் பிடித்தார் மகாத்மா காந்தி.
சவப்பெட்டியின் மேல் மாலைகளுக்கும் பூக்களுக்கும் பதிலாக புத்தகங்களை வைக்கக் கேட்டுக்கொண்டார் ஜவஹர்லால் நேரு.
தலைகுனிந்து என்னை வாசியுங்கள்;
உங்களைத் தலைநிமிர்ந்து வாழ வைப்பேன்.
நான் வெறும் புத்தகமல்ல...
உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி!
உங்கள் அறிவின் திருவிளக்கு!
உங்கள் எதிர்காலத்தின் ஒளிவிளக்கு!
என்னைத் திறந்தால் அறிவு பெருகும்;
என்னைப் படித்தால் சிந்தனை சிறக்கும்;
என்னை நேசித்தால் வாழ்க்கை சிறக்கும்!
நான் வெறும் புத்தகமல்ல...
உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி!
உங்கள் அறிவின் திருவிளக்கு!
உங்கள் எதிர்காலத்தின் ஒளிவிளக்கு!
என்னைத் திறந்தால் அறிவு பெருகும்;
என்னைப் படித்தால் சிந்தனை சிறக்கும்;
என்னை நேசித்தால் வாழ்க்கை சிறக்கும்!
பேசியது சுருக்கம்
கருத்தோ பெருக்கம்
இனி தேவை இல்லை விளக்கம்
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்
கருத்துகள்
கருத்துரையிடுக