என் கனவு இந்தியா - பேச்சுப்போட்டி

உழுது போட்ட விதை எல்லாமே 
கொஞ்ச நாளில் செடியாகும் 
ஒவ்வொரு நாளும் தண்ணீர் 
ஊற்று ஓங்கி வளர்ந்து நெல்லாகும்.

பாடுபட்டு உழைக்கத்தானே 
பலனும் ஒரு நாள் பெரிதாகும்
பாடம் இதனை கற்றுக்கொண்டு 
உழைக்க வாழ்வும் நலமாகும்

அவையோரே,
அதில் பெரியோரே,
இன்றைய சிறியோரே,
நாளைய வரலாறே, 
வருங்கால தேவைகளே, 
எதிர்கால மேதைகளே,
எம் பள்ளி மாணவர்களே, 
உங்கள் அத்துணை பேரையும்
வணங்கி முடித்து 
பேசப்போகிறேன் "என் கனவு இந்தியா"வுக்குள் நுழைந்து...

 "கனவு காணுங்கள்! ஆனால் தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு!" என்று பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்கள் விதைத்த சிந்தனை விதை தான், இன்று நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அணையாத ஜோதியாய் எரிந்து கொண்டிருக்கிறது. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று பாரதி பாடிய பாரத மண்ணில், அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று கூடி உயர்த்தப் போகும் 'என் கனவு இந்தியா'வைக் குறித்து உங்களுடன் பேசுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
            என் கனவு இந்தியாவில் லஞ்சத்திற்கு இடமில்லை, லட்சியத்திற்கு மட்டுமே முதலிடம்! அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கையூட்டு வாங்காத நேர்மையும், மக்கள் பொறுமையோடு சட்டத்தைப் பின்பற்றும் கடமையுணர்வும் இங்கே நிறைய வேண்டும். "லஞ்சத்தை மிதிப்போம்! லட்சியத்தை விதைப்போம்!" என்ற கொள்கையோடு நம் இளைஞர்கள் செயல்பட வேண்டும். இளைய சமுதாயம் மது, மாது, சூது போன்ற தீமைகளுக்கு அடிமையாகாமல், உலகிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒழுக்கச் சீலர்களாக மாற வேண்டும். மதுவும் புகையிலையும் இல்லாத மாசற்ற சமுதாயமே என் முதல் கனவு!
            "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப, வகுப்பறை என்பது வெறும் மதிப்பெண் வாங்கும் இடமாக மட்டும் இல்லாமல், மனிதனை உருவாக்கும் உன்னதக் கூடமாக மாற வேண்டும்! ஆசிரியரையும் பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் மதிக்கும் நற்பண்புகளைக் கல்வியே கற்றுத் தர வேண்டும். பெண்களை வெறும் உடலாகப் பார்க்காமல், உன்னதமான உயிராக மதிக்கப் பள்ளிகளிலேயே பாடமெடுக்க வேண்டும். தவறுகளுக்குத் தண்டனை கொடுப்பதை விட, தவறே நடக்காத சூழலை உருவாக்குவதே என் கனவு இந்தியாவின் கல்வியாக இருக்கும்!
          "நெகிழி இல்லாத நிலம் வேண்டும்! 
நெகிழி வேண்டாம் என்ற  மனம் வேண்டும்!"
பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, வீடெங்கும் மரங்கள் வளர்க்கப்பட்டு, நாம் சுவாசிக்கும் காற்று தாய்ப்பால் போலத் தூய்மையாக இருக்க வேண்டும். பிறர் முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமைப்படாமல், ஆரோக்கியமான போட்டியாக ஏற்கும் நல்மனம் மக்களிடம் மலர வேண்டும். வியாபாரத்திற்காக நஞ்சைக் கொடுக்கும் நிலம் மாறி, இயற்கை முறையில் பயிரிட்டு மக்களின் உடலையும் உயிரையும் காக்கும் விவசாயிகளின் நாடாக என் இந்தியா திகழ வேண்டும்.
            "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்றும் 
"அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
"
எனும் பாரதியார் வாக்கின்படி அறியாமையில் இருந்து வெளிவந்து நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளையும் கொண்டு வாழ்வார்கள் பெண்கள்.எந்த நேரத்திலும் சாலையில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடும் நாடே என் கனவு இந்தியா!.
சாதி, மதம், இனம், மொழி, பாலின வேறுபாடுகள் அற்ற சமத்துவச் சமுதாயம் அங்கே நிலவ வேண்டும். "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!" எனும் உழைத்து முன்னேறும் நாடாக இருக்கும் என் கனவு இந்தியா.  திரையரங்குகளில் நடிகர்களைத் தலையில் தூக்கிச் சுமக்கும் கலாச்சாரம் மாறி, தேசத்திற்காக உழைத்த தியாகிகளையும் நல்மனிதர்களையும் நெஞ்சில் ஏந்தி வாழும் தலைமுறையாக இருக்கும் என் கனவு இந்தியா. 
            "காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்று அன்று பாரதியார் கண்ட கனவு இன்று அறிவியலால் நனவானது போல, நான் கண்ட இந்த 'கனவு இந்தியா'வும் நிச்சயமாக ஒருநாள் நனவாகும்! அன்பு, ஒழுக்கம், சமத்துவம், பாதுகாப்பு ஆகியவற்றில் உலகிற்கே வழிகாட்டும் விஸ்வரூப இந்தியாவை நாம் அனைவரும் இணைந்து படைப்போம்!

பிறந்த பிறப்பினை நலமாக்கி 
பண்பினில் மனிதனை வளமாக்கி
நிறைந்த சேவையை நிகழ்வாக்கி
நன்றியை நெஞ்சினில் மிகத்தேக்கி 

கனவு இந்தியாவை உருவாக்கி 
ஒழுக்கத்தை நெஞ்சினில் மெருகேற்றி 
வாழ்க்கையில் இன்ப வளம் கூட்டி 
வாழ்ந்து காட்டுவோம் வான்நோக்கி 

பேசியது சுருக்கம்
கருத்தோ பெருக்கம்
இனி தேவை இல்லை விளக்கம்
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

சுதந்திர தின பேச்சு போட்டி

பெண்மையை போற்றுவோம்- பேச்சுப்போட்டி