இளையோர் திறன் - பேச்சுப்போட்டி

அன்பைப் பெருக்கி 
எனதாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே 
தமிழே தாயுள்ளமே, 
அன்பு கூட்டி அக்கறை காட்டும்
ஆசிரியப் பெருமக்களே
இன்று சின்னஞ்சிறு மொட்டாய்
நாளை ஆலமரத்து வித்தாய்
இந்தியாவின் சொத்தாய்
உருவெடுக்கக் காத்திருக்கும்
நாளைய நாயகர்களே
எம் பள்ளி மாணவர்களே
உங்கள் அத்துனை பேரையும் வணங்கி
பேசப்போகிறேன் என் தலைப்பில் இறங்கி..

"எனக்கு நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்தத் தேசத்தின் முகச்சாயலையே மாற்றிக் காட்டுகிறேன்!" என்று முழங்கினார் புரட்சித் துறவி சுவாமி விவேகானந்தர். அவர் ஏன் முதியவர்களையோ, பெரும் பணக்காரர்களையோ கேட்கவில்லை? ஏனென்றால், இளைஞர்களின் கரங்களில்தான் இந்த உலகத்தை மாற்றும் ஆற்றல் மறைந்திருக்கிறது என்பதை அவர் ஆழமாக நம்பினார்! 
குழந்தையைப் பெற்றெடுத்து
வளர்ப்பது தாயின் கடமை,
அவனை அறிஞனாக்குவது
தந்தையின் கடமை,
ஆயுதம் செய்து தருவது
கொல்லனின் கடமை,
நல்வழிப்படுத்துவது
மன்னனின் கடமை.
இளையோருக்கு என்ன கடமை தெரியுமா ?
போர்க்களமாக இருந்தாலும் சரி,
எடுத்த செயலாக இருந்தாலும் சரி,
பெரும் தடைகளை எதிர்த்து நின்று தன் திறமையையும் வீரத்தையும் காட்டி வெற்றி பெறுவது இளைஞனின் கடமை என்கிறது புறநானூறு.
"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் உருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்று,
பண்டைய தமிழ் இலக்கியங்களின்படி இளையோரின் திறன்கள் எப்படி குறிப்பிடப்படுகிறது தெரியுமா ?
ஆற்றலின் அடையாளம் என்று புறநானூறும், 
கற்றலின் பருவம் என்று ஆத்திசூடியும், 
முயற்சியின் வடிவம் என்று திருக்குறளும் ,
சாதிக்கும் வயது என்று பழமொழி நானூறும் கூறுகிறது 

இவையெல்லாம் போதாது என்று,
"அச்சம் தவிர்!"
"ஆண்மை தவறேல்!"
"இளைத்தல் இகழ்ச்சி!"
"தோல்வியிற் கொதித்தெழு!"
"ரௌத்திரம் பழகு!"
என்று இளையோர்களை மீசை முறுக்கி கொம்பு சீவி விடுகிறார் முண்டாசு கவிஞன் தமிழ்த்தலைவன் பாரதி... 
இளமைப் பருவத்தில்தான் உடலும் மனமும் சுறுசுறுப்பாகவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறனோடும் இருக்கும். அந்தப் பருவத்திலேயே அறிவையும், தொழில்சார் திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். இளமையில் கற்கும் கல்வி, "கல்மேல் எழுத்து" போல என்றும் அழியாது இருக்கும்.
 
கரிகாலன் மிகச் சிறிய வயதிலேயே அரியணை ஏறினான். "இவன் இளைஞன், இவனால் சிக்கலான வழக்குகளுக்குச் சரியான நீதி வழங்க முடியாது" என்று முதியவர்கள் அஞ்சினர். ஆனால், கரிகாலன் தன் திறமையாலும் கூர்மையான அறிவாலும் முதியவர்களே வியக்கும் வண்ணம் சரியான தீர்ப்பை வழங்கி இளையோரின் திறன் என்ன என்பதை நிருபித்தான். "திறமைக்கு வயது தடையில்லை" என்பதற்கு இதுவே தமிழனின் வரலாற்றுச் சான்று.
இதைத்தான் பழமொழி நானூறு சுட்டிக்காட்டுகிறது.
"உரைமுடிவு காணான்
இளமையான் என்றாங்கு
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன்" என்று ,,,

உலகளாவிய சிந்தனையும்,
தனிப்பட்ட பொறுப்புணர்வும்,
நன்மை செய்வதில் ஆர்வமும்
இளைஞனின் அடையாளமாக இருக்க வேண்டும்.
நன்மை செய்ய முடியாவிட்டாலும்,
தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இதைத்தான் புறநானூறு கூறுகிறது 
"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்" என்று 
இளைஞர்கள் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று பாரதிதாசன் கூறுகிறார் தெரியுமா?...
"கடன்வாங்கக் கூடாது தம்பி—மிகக்
கருத்தாய்ச் செலவிட வேண்டும்
உடம்பினைக் காப்பாற்ற வேண்டும்.
உணவினில் நல்லுணவை உண்பாய்
உடைந்திடக் கூடாது நெஞ்சம்—நீ
உண்மைக்குப் பாடுபடும் போதில்!
அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும்—நீ
அயல்பொருள் பறிக்கஎண்ணாதே" என்று 

சுவரில் இருக்கும் கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கி நகரலாம், ஆனால் கடந்துபோன நமது இளமைப் பருவம் ஒருபோதும் மீண்டும் வராது. "முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்" என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப, உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள்.
சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிப்பதைக் குறைத்து,
நடிகர்கள் பின்னால் ஓடுவதை நிறுத்தி
உங்கள் திறமையை மெருகேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள். தோல்விகளைக் கண்டு அஞ்சாதீர்கள்; ஒவ்வொரு தோல்வியும் உங்களைச் செதுக்கும் உளி என்பதை மறவாதீர்கள். 
இளமையின் துடிப்பையும்,
திறமையின் அறிவையும் சரியான பாதையில் செலுத்துவோம்.
சாதனைகளைச் சரித்திரத்தில் எழுதுவோம்!
இந்திய திருநாட்டை உலகரங்கில் தலைமைத் தாங்க வைப்போம்!

உழைப்பை உயிராக்கு,
உலகத்தை உனதாக்கு!
சிந்தனை தெளிவாக்கு 
நாட்டை வளமாக்கு. 

புத்தகம் பிடித்த கைகள்
பூமிக்கு பெருமை தரும்  
பண்புடன் வாழும் இளைஞன்
பூமியை ஆளும் நாள்வரும்.

இளமை என்பது வயதல்ல;
விழித்தெழும் வல்லமை!
திறமை என்பது பரிசல்ல;
தினம் வளர்க்கும் பயிற்சி!

இன்றைய இளைஞரின் திறமை
நாளைய நாட்டின் பெருமை!

இளையோர் எழுந்தாலே
இனிய உலகம் மலர்ந்திடுமே
இளையோர் திறனாலே 
இந்தியா உயர்ந்திடுமே

முடியாது என்று சொல்லி முடங்கி கிடக்காதே
கடிகாரத்தின் உழைப்பை கவனி கவலை கொள்ளாதே
தடைகளை தகர்த்தெறிவோம்
உழைப்பாலே உயர்ந்திடுவோம்
நல்லதை நினைத்திடுவோம் 
அன்பால் உலகை வென்றிடுவோம்

கல்வியே சிறந்தது
கண்கள் போல் ஒளிர்வது
கல்வியை வலியுறுத்தி
ஒழுக்கத்தை அறிவுறுத்தி
முயற்சியை செயல்படுத்தி 
காலத்தை முன்னிறுத்தி
முடிக்கிறேன் என் பேச்சை நிறுத்தி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

சுதந்திர தின பேச்சு போட்டி

பெண்மையை போற்றுவோம்- பேச்சுப்போட்டி