சுதந்திர தினத்தின் மகத்துவம் - கட்டுரை
குறிப்புச் சட்டகம்:
1. முன்னுரை
2. அடிமைத்தனமும் போராட்டமும்
3. தியாகிகளின் அர்ப்பணிப்பு
4. இன்றைய சமூக பார்வை
5. தமிழகத்தின் பங்கு
6. சுதந்திரத்தை காக்கும் வழிகள்
7. முடிவுரை
முன்னுரை:
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்ற வரிகளுக்கு ஏற்ப, தாய்நாட்டின் விடுதலையும் சுதந்திரக் காற்றும் மனித வாழ்வின் உயரிய பேறுகளாகும். இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் புனிதமான நாளாகும்.
அடிமைத்தனமும் போராட்டமும்:
வேற்று நாட்டவர் நம் மண்ணைத் தொட்டு, நம்மையே அடிமையாக்கி ஆட்சி செய்த காலத்தில், நமது ஏழை மக்கள் யானைக் காலில் மிதிபடும் எறும்புகளைப் போலத் துன்பத் துயரங்களில் உழன்றனர். அந்த அடிமை விலங்கினை உடைத்தெறியவும், மக்களின் கண்ணீரைத் துடைக்கவும் நம் முன்னோர் வீறுகொண்டு எழுந்தனர். அல்லும் பகலும் உழைத்து, அடியிலும் உதையிலும் பிழைத்து, அச்சம் தவிர்த்த நெஞ்சத்தோடு போராடினர். சாதி, மத வேற்றுமைகளைக் களைந்து, 'ஒற்றுமை' என்னும் வாளெடுத்து, 'அகிம்சை' என்னும் போர் தொடுத்து, விடுதலை முழக்கமிட்டுச் சுதந்திரம் எனும் அருமருந்தைப் பெற்றெடுத்தனர்.
தியாகிகளின் அர்ப்பணிப்பு:
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?" என்று மகாகவி பாரதியார் கதறியது போல, குருதியையும் கண்ணீரையும் சிந்திப் பெறப்பட்டதே நம் சுதந்திரமாகும். சத்தியத்தின் வழிநின்று, தத்துவத்தில் உறுதியாய் இருந்து, சரித்திரத்தில் முத்திரை பதித்து வீரம் விளைவித்த தலைவர்களின் தியாகங்களை நாம் என்றும் மறக்க முடியாது. அவர்கள் சிந்திய ரத்தம் இன்று நமக்குச் சுதந்திரக் காற்றை வழங்கியுள்ளது. அத்தகைய தியாகசீலர்களை நாம் என்றென்றும் நெஞ்சில் ஏந்திப் போற்ற வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
இன்றைய சமூக பார்வை:
இன்றைய காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் பற்றியப் பார்வைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. முதியோருக்கு இது நீண்ட போராட்டத்தின் நினைவாகவும், இளைஞர்களுக்கு இது நாட்டின் பெருமை மற்றும் மரியாதையின் அடையாளமாகவும், சில குழந்தைகளுக்குப் பள்ளியில் இலவசமாக இனிப்பு வழங்கும் நாளாகவும் தெரிகிறது. ஆனால், சுதந்திர தினம் என்பது பள்ளி இனிப்போடு முடிவதன்று. நாடு முழுவதும் சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து தேசிய உணர்வோடும் தேசபக்தியோடும் கொண்டாடப்பட வேண்டிய திருவிழாவாகும். இது பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடும் இந்தியாவின் மாபெரும் அடையாள விழா ஆகும்.
தமிழகத்தின் பங்கு:
பாரதத் தாயின் அடிமை விலங்கைத் தகர்ப்பதில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. மன்னர்கள் மட்டுமே போராடாமல், கவிஞர்கள், கலைஞர்கள், உயர்கல்வி கற்ற அறிஞர்கள் முதல் பாமரக் குடிமக்கள் வரை அனைவரும் விடுதலைப் போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். வ.உ.சி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகச் செம்மல்கள் தம் வாழ்வைத் துச்சமென மதித்து தாய்நாட்டிற்காக உயிரைத் தந்தனர். அவர்கள் அரும்பாடுபட்டுப் பெற்றுத் தந்த இந்தச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
சுதந்திரத்தை காக்கும் வழிகள்:
நாமும் நமது தேசமும் உயர்வடையச் சாதி, மத வேறுபாடுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பாரதத் தாயின் பாதம் பணிந்து, ஒற்றுமையைப் பலப்படுத்தி, நமது தேசியக் கொடியை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க வேண்டும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாம், தியாகிகளின் வரலாற்றைத் தவறாமல் வாசித்து, அவர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும். நாம் அனைவரும் 'இந்தியர்' என்ற ஒரே உணர்வோடு இணைந்து வாழும்போதுதான் தியாகிகளின் கனவு நனவாகும்.
முடிவுரை:
பெற்ற சுதந்திரத்தைக் காப்பதே தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும். பிறந்த பிறப்பினை நலமாக்கி, பண்பினில் மனிதனை வளமாக்கி, தாய்நாட்டிற்குச் செய்யும் சேவையை வாழ்வின் நிறைவாக்க வேண்டும். தியாகிகளின் குருதியால் மலர்ந்த சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்து, 'இந்தியன்' என்பதில் பெருமிதம் கொண்டு, ஒற்றுமையுடன் வாழ்ந்து தாய்நாட்டை உலக அரங்கில் உயர்த்த சபதமேற்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக