சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி

அகழ்வாரை தாங்கும் புவியே,
செந்தமிழ் மொழியே, 
தேன் தமிழ் சுவையே, 
இங்கு கூடியிருக்கும் அவையே,
அவையில் இருக்கும் பெருந்தகையே,
நேரிய பணி செய்ய காத்திருக்கும்
கூரிய அறிவுபடைத்த எம் இளம்
காளையர்களே,
கன்னியர்களே... 
உங்கள் அத்துனை பேரையும்
வணங்கி முடித்து 
பேசப்போகிறேன் என் 
தலைப்பை பிடித்து

"இயற்கையின் தலையில் நாம் சுத்தியலால் அடிக்கிறோம் பின்பு அது எப்படி நகர்கிறது என்று நாம் வேடிக்கை பார்க்கிறோம்"என்கிறார் ஒரு ஆங்கில அறிவியல் அறிஞர்...
வீடும் நாடும் நமது இரு கண்கள். வீடானாலும் சரி நாடானாலும் சரி அதை சுத்தமாய் வைத்திருப்பது நம் கடமை....
தூய்மை என்பது நமது சுய நடவடிக்கைகளில் இருந்து வருகிறது...
இதைத்தான் நம் முன்னோர்கள் "கூழானாலும் குளித்துக் குடி, கந்தை ஆனாலும் கசக்கி கட்டு, புறந்தூய்மை நீரான் அமையும்" என்று கூறுகின்றனர். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு என நமது சுற்றுப்புறம் அநேக மாசுபாடுகளால் சீரழிந்து வருகிறது. இளைஞர்களாகிய நாம் இதை எப்படி தடுத்து நிறுத்த முடியும், கண்டிப்பாக முடியும் நம்மால் மட்டுமே விடியும்... 
"சின்னஞ்சிறுசெல்லாம் சிகரெட்டு பிடிக்குது சித்தப்பன்மார்கெட்ட தீப்பெட்டி கேக்குது" எனும் நாட்டுப்புறப் பாடல் கூறுவது போல் மோசமான இளைஞனாக இல்லாமல் நாட்டை காக்கும் வீரமான இளைஞர்களாக இருக்க வேண்டும்... "சுத்தம் சுகம் தரும், சத்தம் சுமை தரும்" என்பதை உணர்ந்து வாகனங்களிலும், விழாக்களிலும் அதிக ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், பூமிக்கு மேலே தண்ணீரை தேங்க விட்டு நோய்களை பரப்பாமல் பூமிக்கு அடியில் தண்ணீரை சேமிக்க முயற்சி செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தவிர்த்துவிட்டு  கடைகளுக்கு செல்லும் பொழுது கையை ஆட்டிக் கொண்டு செல்லாமல் பையை எடுத்துச் செல்ல வேண்டும்...
இதையெல்லாம் விட மிக முக்கியமானது பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் கவிதைகளிலும் வசனம் எழுதுவதைவிட  நிஜ வாழ்க்கையில் அதை பின்பற்றுவது தான் நாம் இந்த பூமிக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு.
சோம்பேறித்தனத்தாலும் அலட்சியத்தாலும் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் நம்மையும் நம் சந்ததிகளையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை உணர வேண்டும். செயலைச் செய்யும் முறைகளை அறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர், 
"செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்" என்று...
உண்மையில் ஒரு மனிதனைச் சுற்றி இயற்கைசூழல் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?. இதோ பாரதி அழகாக எடுத்துரைக்கிறார்...

"பத்துப் பன்னிரண்டு - தென்னை மரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச்சுடர் போலே - நிலவொளி
முன்பு வர வேணும்; அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் பட வேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்" என்று.
ஆனால் பாரதி இன்று இருந்திருந்தால் எப்படி பாப்பா பாடலை எழுதி இருப்பார் தெரியுமா..?
பல லட்சம் வாகனங்கள் புகையை தள்ளுகிறது பாப்பா- நல்ல 
முத்துச்சுடர் போலே நெகிழிப்பைகள்
 பளபளப்பாய் இருக்கிறது பாப்பா- அவை பூமிக்கு மேலே நின்று 
மழை நீரை உள்ளே விடாமல் தடுக்கிறது பாப்பா -பல ஆயிரம்
ஆண்டுகள் மக்காமல் நம் தலைமுறையை கெடுக்கிறது பாப்பா-சாலை 
ஓரத்திலே மக்கள் துப்பும் எச்சில் எல்லாம் நல்ல நோயைத் தருகிறது பாப்பா - நாமும் இதையெல்லாம் சகித்துக் கொண்டே வாழ்ந்து பழகிவிட்டோம் பாப்பா."
 என்று மனம் நொந்து பாடியிருப்பார்... 
"நாம் அனைவரும் மெல்லிய நூலிலையால் இணைக்கப்பட்டவர்கள். உன்னை துன்புறுத்தினால் அது என்னை துன்புறுத்தும்" என்பதை அனைவரும் உணர வேண்டும்.அதற்கேற்றபடி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சுய ஒழுக்கமாய் நடந்து கொள்ள வேண்டும்...
நெகிழிகளை நாம் அழிக்கவில்லை என்றால் அது நம் தலைமுறையை அழிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.. 
"புதிதாய் பிறக்கும் இளம் தளிர்கள் 
நடை பழகும் பிஞ்சு மழலைகள் 
இந்த பூவுலகில் நம்பிக்கையுடன் பாதம் பதிக்க 
பிரபஞ்சத்தில் ஒரே உயிர் கோளும் 
நமது ஒரே வீடுமான பூவுலகை
 பத்திரமாய் பார்த்திருப்போம்"
 என்று கூறி...
சுட்டாலும் சங்கு வெண்மை தரும், மிதித்தாலும் பூமி தாங்கி நிற்கும், சபித்தாலும் வானம் மழை கொடுக்கும்,
வெற்றி கிடைத்தால் அடக்கம் எழுந்து நிற்கும், தோல்வி கிடைத்தாலும் என் பயணம் தொடர்ந்து நிற்கும், 
முயற்சியும் பயிற்சியும் நம் கையில், முடிவு எப்பொழுதும் இறைவன் கையில், பேச்சின் முடிவில் வணங்குவது என் வழக்கம்,
பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி வணக்கம்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,