கூட்டுறவே நாட்டுயர்வு

முன்னுரை:
        மனிதன் கூடிவாழும் தன்மையுடையவன். தனிபட்ட முறையில் ஒரு காரியத்தைச் செய்வதைவிடப் பலர் செய்தால் காலமும் பணமும் மிச்சப்படும், துன்பம் குறையும். தனித்தனியே பிரிந்து வாழும்போது உண்டாகும் செலவு சேர்ந்து வாழும்போது உண்டாவதில்லை. ஆகவே, நாமெல்லோரும் எல்லாக் காரியங்களையும் கூட்டாகச் சேர்ந்தே செய்ய வேண்டும். இதுவே கூட்டுறவு இயக்கம் எனப்படும். இதனையே சுவிஞர் பாரதி 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்றார்.

மனிதன் தேவைகள்:
        பிறர் துணையின்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உணவுக்கும் உடைக்கும், உற்ற பிறவேலைக்கும் மற்றவரை நாட வேண்டியுள்ளது. உழவன் ஒருவனுக்கு உணவு தந்தால் நெசவாளி அந்த உழவனுக்கு உடை அளிக்கிறான். எனவே ஒருவருக்கொருவர் இணைந்துதான் செயல்பட வேண்டும். மக்கள் ஒன்றுபடாது போனால் எதுவும் நடைபெறாது.

கூட்டுறவுக் கொள்கை:
          கூட்டுறவே நாட்டுயர்வு' என்பதும் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதும் இந்நாட்டுப் பொன் மொழிகள். தனி மனிதனுக்காகச் சமூகமும் சமூகத்திற்காகத் 'தனி மனிதனும்' என்பது கூட்டுறவுக் கொள்கை. இதை அடிப்படையாகக் கொண்டே கூட்டுறவு இயக்கம் தொடங்கிற்று. இவ்வியக்கம் இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கிறது. உறுப்பினர் சிலர் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட தொகையைப் பங்காகக் செலுத்தி சங்கத்தைத் தோற்றுவித்தனர். இதற்கு அரசு பொருள் உதவி செய்தும், வரவு செலவுக் கணக்கை அலுவலர் கண்காணித்தும் வருவது உறுதுணையாயிருக்கும்.

பலவகைகள்:
       உலகில் பலப்பல நாடுகளில் கூட்டுறவு சிறப்புற நடைபெறுகின்றது. பொருள் வாங்கவும், விற்கவும் இடையில் தரகர் அல்லது வணிகர் அடையும் இலாபம் இல்லாமல் செய்யவும், நல்ல பொருள்களைப் பெற்றுப் பயனுறவும் கூட்டுறவு இயக்கங்கள் துணையாகின்றன. இவ்வியக்கத்தில் பல வகைகள் உண்டு. கூட்டுறவு வங்கி, கட்டடக் கூட்டுறவுக் கழகம், நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலை, கூட்டுறவுப் பால் பண்ணை, கூட்டுறவு வேளாண்மைக் கழகம், கூட்டுறவு கொள்முதல் அங்காடி, கூட்டுறவு விற்பனைக் கழகம், மாணவர் கூட்டுறவுச் சங்கம் என நம் நாட்டில் பல உள்ளன.

நன்மைகள்:
          இத்தகைய கூட்டுறவுச் சங்கங்களினால் மக்கள் பெறும் பயன்கள் எண்ணற்றவையாகும். விவசாயிகள் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி வேளாண்மையைப் பெருக்குகிறார்கள். இதன் மூலம் அநியாயவட்டிக்குக் கடன் கொடுக்கும் பணமுதலைகள் பிடியிலிருந்து விடுபடுகிறார்கள். நமக்கு வேண்டிய நல்ல பொருள்களைக் குறைந்த விலையில் பண்டக சாலைகள் மூலம் பெறுகின்றனர். வாடகையாக வீட்டிலிருந்து கொண்டே பல ஆண்டுகளுக்குப் பின் தமக்குச் சொந்தமாக உரிமை பெறுகின்றனர். நல்லவிதை, உழவுக் கருவிகள், தாராளமான உரம், தூய்மையான பால், மலிவான பொருட்கள் ஆகிய அனைத்தும் கூட்டுறவுச் சங்கங்களினால் கிட்டுகின்றன.

முடிவுரை:
       கூட்டுறவு இயக்கத்தை நடத்திச் செல்பவர்கள் பொது நலத்தில் விருப்பமுடையவர்களாக இருத்தல் வேண்டும். மாறாக இருப்பின் கையூட்டும் மனக்கசப்பும் ஏற்படும்.
எனவே நன்மைகள் பல தரும் கூட்டுறவு இயக்கத்தை வளர்த்து நாடு முன்னேறப் பாடுபடுவோம். குறைகளை நீக்கி நிறைவுடையதாக்கி நற்பயன் காண்போமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி