சாரணர் இயக்கம் (Scout) - கட்டுரை
முன்னுரை:
சிறிய வயதிலேயே ஒழுக்கமான பழக்க வழக்கங்களை கற்றுத்தரும் அமைப்பு, 'சாரணர் இயக்கம்' ஆகும். சிந்தனையால், செயலால், சொல்லால், முயற்சியால் ஒரு மனிதனை எல்லா வகையிலும் செம்மைப்படுத்தும் இயக்கம் சாரணர் இயக்கமாகும். சாரணர் இயக்கத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்
தோற்றம்:
இவ்வியக்கம் 1907-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் 'ராபர்ட் பேடன் பவுல்' என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடந்த போரில் பல வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்தப் போரில் லெப்டினெண்ட்டாக பணியாற்றியவர் பேடன் பவுல் ஆவார். போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சையிலும் பிற உதவிகளிலும் இளைஞர்கள் செய்த உதவிகள் பேடன் கவுலைக் கவர்ந்தது. எனவே இத்துறையில் சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தால் நாட்டிற்கு பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினார். அந்த அடிப்படையில்தான் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு 'சாரணர் இயக்கம்' தோற்றுவிக்கப்பட்டது.
அமைப்பு:
12 முதல் 17 வயது வரையிலுள்ள சிறுவர்களைக் கொண்டு இவ்வியக்கத்தை அவர் ஆரம்பித்தார். ஒவ்வோர் அணிக்கும் விலங்கு அல்லது பறவைகளின் பெயரைச் சூட்டினார். ஒவ்வோர் அணிக்கும் ஒரு தலைவனை நியமித்தார். அவர்களுக்கு போர்க்களத்திற்குச் செல்லும் முறை, முதலுதவி செய்தல், ஒற்றாடல் போன்றவற்றில் பயிற்சியளித்தார். சிறுவர்களின் விரைவான செயலாக்கமும், கூர்மையான மதியும் பெருமளவு பயனைத் தந்தது. போருக்குப் பின் தன் பதவியைத் துறந்த பேடன் பவுல் 1908-இல் மாணவர்களுக்கு சாரண இயக்கத்தையும், 1910- இல் மாணவியருக்கான சாரணிய இயக்கத்தையும் தோற்றுவித்தார். இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள் 1917-இல் சாரண- சாரணிய இயக்கத்தைக் கொண்டு வந்தார்.
பயிற்சிகளும் வழிமுறைகளும்:
மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சி தரப்படுகிறது. வெளியூர்களில் முகாமிட்டும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதலுதவி செய்தல், மரம் நடுதல், வளாகங்களைச் சீர்படுத்துதல், கயிறு ஏறுதல் எனப் பயனுள்ள வகைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்வேறு ஊர்களில், மாநிலங்களில் உள்ள மாணவர்கள் ஒன்றாக இம்முகாம்களில் கலந்து கொள்வதால் மாணவர்களிடையே ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் மேலோங்குகிறது. பயிற்சிகளின் இடையே விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்
நன்மைகள்:
சாரணர் இயக்கத்தினால் சிறுவர்களிடம் கட்டுப்பாட்டுணர்ச்சியும் ஒழுக்கமும் ஏற்படுகிறது. தலைவனுக்குக் கீழ்ப்படியும் உணர்வும் குழு உணர்வும் ஏற்படுகிறது. ஒற்றுமையை, கடமை தவறாமையை, உதவி செய்தலை சிறார்களிடம் வளர்க்கிறது. பயிற்சி முடிந்த சாரணர்கள் பயிற்சியுடன் நில்லாது தொண்டுகளும் புரிவர். விழாக்களில் மக்களை வழி நடத்தும் பணியிலும், சாலைகளைக் சீரமைக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். குழுவாக இல்லாமல் தனிப்பட்ட முறையிலும் பாம்பு, தீ, தண்ணீர், விபத்து போன்றவற்றால் ஆபத்து ஏற்படும் போதும் முதலுதவி செய்து காப்பாற்றுகின்றனர்.
முடிவுரை:
சாரணர் இயக்கம் சிறுவர்களுக்கான இயக்கமாக இருந்தாலும் அவர்களைச் சிகரங்களுக்கு அழைத்துச் செல்பவையாகும். 'எப்போதும் தயாராக இரு' என்பது சாரணர் இயக்கத்தின் முக்கிய முழக்கமாகும். அதன்படி பிறருக்கு சேவையாற்ற எந்த நேரமும் தன்னைத் தயாராக வைத்திருக்கும் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து நன்மை புரிவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக