ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - கட்டுரை

முன்னுரை:
           "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே"  என்று பாரதியார் கூறியுள்ளார். விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற உயிர்கள் கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக வாழ்கின்றன. அப்படியிருக்கும் போது ஆறறிவு படைத்த மனிதன் ஒற்றுமையாக வாழ்வதுதான் நியதி.

 ஒற்றுமையின் அடித்தளம்:
              "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பார்கள். அதுபோல குழந்தைகளிடம் பெரியவர்கள் ஒற்றுமையுணர்வை சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒற்றுமையை வளர்க்கும் நீதிநெறிக் கதைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் செய்தி, கதைகள், பழமொழிகள் என்று எதுவாக இருந்தாலும் குழந்தைகள் மனதில் ஆழப் பதிந்துவிடும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுவதால், வீட்டிலுள்ள தாத்தா, பாட்டி போன்றவர்களால் மட்டுமே குழந்தைகளிடம் ஒற்றுமையை வளர்க்கும் பண்புகளைச் சொல்லித்தர முடியும். அவர்களையடுத்து, குழந்தைகளிடம் ஒற்றுமையுணர்வை கொண்டு வரும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. அடித்தளம் உறுதியாக இருந்தால்தான் கட்டடமும் உறுதியாக இருக்கும். அதுபோல குழந்தைகளிடன் நாம் சொல்லிக் கொடுக்கின்ற ஒற்றுமையுணர்வு பெரியவர்களாக அவர்கள் வளர்ந்த பின்னும் உறுதியாக இருக்கும்.

ஒற்றுமையின் பலன்:
           சுதந்திரப் போராட்ட காலத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமைதான் வெள்ளையர்களை நம்நாட்டை விட்டு விரட்டியது. அன்று நம்மிடையே சாதி, மதம், இனம், மொழி, கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இருந்தது. எல்லோரிடத்தும் “விடுதலை’ என்ற ஒரே உணர்வுதான் ஓங்கியிருந்தது. அதன் பயனாக சுதந்திரம் அடைந்தோம். 'வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழ்வோம்; வீழ்ந்தால் முப்பது கோடியும் வீழ்வோம்' என்று பாரதியின் வாக்கிற்கிணங்க வாழ்ந்தோம்; வெற்றி பெற்றோம்.

 ஒற்றுமையை பாதுகாத்தல்:
           அந்நியர்கள் வந்து புகும் போது மட்டும் நம்மிடையே ஒற்றுமையுணர்வு இருந்து பயனில்லை. எப்பொழுதுமே நாட்டிலும் வீட்டிலும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பல்வேறு மொழி, இன, கலாச்சார பண்புகளை கொண்டுள்ள நாம் நாட்டுநலனுக்காக சில வேளைகளில் சுயநலத்தை விட்டுக் கொடுக்க வேண்டி வரலாம். இல்லையேல் நாடு பிளவுபட நேரிடும். உலக அளவில் தன்மதிப்பிழந்து நாடு நலிவுறும். 

 முடிவுரை:
       மக்கள் தங்கள் சொந்த வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி ஒற்றுமையைக் கடைபிடித்தால்தான் நம்முடைய வாழ்வோடு நாடும் சிறப்படையும். "முப்பது கோடி முகமுடையான் - உயிர்
மொய்ம்புற ஒன்றுடையான்” என்பது நனவாகும்படி நாம் நடந்துகொள்ள வேண்டும். சாதாரண பதவிக்காகவும், தண்ணீருக்காகவும், மொழிப் பிரச்சனைக்காகவும் ஒரு மாநிலத்தார் அடுத்த மாநிலத்தாரிடம் பகைமை பாராட்டுவதற்காகவா நாம் விடுதலை பெற்றோம் ? ஒற்றுமையை வீட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்று எழுத்திலும் பேச்சிலும் கூறிக்கொண்டே பெற்றோரை கூட 'முதியோர் இல்லத்தில்' சேர்ப்பதுவா ஒற்றுமை? இனியாவது ஒன்றுபட்டு வாழ்வோம்! தரணியில் உயர்வோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி