மனம் விட்டு பேசு இனிக்கும் வாழ்வு - கவிதை
நல்லறமாய் இல்லறம் தான் திகழ்வதற்கு
நன்றாக பேசுங்கள் மனம் கலந்து
பொல்லாத பகை எல்லாம் போவதற்கு
போய்அமர்ந்து பேசுங்கள் மனம் திறந்து
நல்லுறவு சுற்றமுடன் வளர்வதற்கு
நகைமுகமாய் பேசுங்கள் மனம் கலந்து
சொல்லுக்கு வலிமையுண்டு சோர்வைப் போக்கும்
சொல்லாடல் செய்யுங்கள் மனம் திறந்து
பேச்சு
மனப்புண்ணை ஆற்றுகின்ற மருந்தாய் ஆகும்
மனம் விட்டு பேசுங்கள் உங்கள் பேச்சு
மனவழுத்த கவலைகளை குறையச் செய்யும்
மனம் விட்டு பேசுங்கள் உங்கள் பேச்சு
மனத்தரிக்கும் ஐயத்தை நீங்கச் செய்யும்
மனம் விட்டு பேசுங்கள் உங்கள் பேச்சு
மனவழுக்கை வெளியேற்றி தூய்மை செய்யும்
வசையோடு வீசுகின்ற சொற்கள் கூட
வலுவிழக்கும் மனம் விட்டு பேசும்போது
நசையோடு பேசுங்கள் பேசாதோரும்
நலம் கேட்பர் கடுகடுத்த சினத்தை விட்டு
விசையோடு நம்பிக்கை ஊட்டும் நெஞ்சம்
விரிவாகும் மனம் விட்டு பேசும்போது
இசையோடு வருகின்ற இன்பம் போல
மனம் இணைத்து பேசுங்கள் இனிக்கும் வாழ்வே.
-பாவலர். கருமலைத் தமிழாழன்
கருத்துகள்
கருத்துரையிடுக