குழந்தை தொழிலாளர் -கட்டுரை

முன்னுரை:
         'இளமையில் கல்' என்ற முதுமொழிக்கு ஏற்ப படிக்க வேண்டிய இளமைப்பருவத்தில் படிக்காமல் கூலிக்கு வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயம் நம் நாட்டுக் குழந்தைகளுக்கு ஏற்பட்டது வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். பாரத மணித்திரு நாட்டின் எதிர்கால மன்னர்களான இந்தியச் சிறார்களின் நிலைமையைப் பார்த்தால் பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதிலையே" என்னும் வரி நினைவுக்கு வரும். அது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

குழந்தை தொழிலாளர்:
              குழந்தைத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலும் கடைகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும், கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர் எனப்படுவர். சிமெண்டுச் சட்டியும், செங்கற்களும் சுமக்கின்றனர். விடுதிகளில் மேசை துடைக்கின்றனர். திரை அரங்குகளின் சுவரொட்டி விளம்பரங்களை ஒட்டுகின்றனர். மளிகைக் கடைகளில் பொட்டலம் மடிக்கின்றனர். இளமையில் பெற வேண்டிய கல்வியைப் பெறாது, உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு, பண்பு இழந்து ஒரு கட்டத்திற்கு பிறகு விரக்தி அடைந்து சமூக விரோதிகளாகின்றனர்.

நம் கடமை:
          சிறார்களை நல்வழிப்படுத்துவது அவசியமாகும். இதற்குப் பெற்றோர்கள் உணவும் கல்வியும் தருவது தம் கடமை எனக் கருதவேண்டும். இதனை உணராத பெற்றோர்க்கு மற்றைய சமூக நல சங்கங்கள் உணர்த்த வேண்டும். இதற்காகச் சட்டரீதியாகத் தண்டனை வழங்கினாலும் குற்றமில்லை.
எல்லாக் குழந்தைகளும் தொடக்கக் கல்வியைக் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில், இருந்தாலும் செயல்படுத்த முடியவில்லை. கிராமத்தில் இருக்கும் கிராம அதிகாரிகள் குழந்தைகளைக் கணக்கெடுத்து, கல்வியைத் தொடர வழிவகை காணவேண்டும். அரசு இலவசக்கல்வி வழங்குகிறது, ஏழைச் சிறார்களுக்கு மதிய உணவு தருகின்றது. இலவசமாகப் புத்தகம் தருகின்றது. இவற்றையெல்லாம் கல்வியறிவு பெறாத பெற்றோர்க்கு எடுத்துக்கூறி அவர்களின் இடையூற்றைக் களைய அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளின் பொறுப்பு:
       கடினப்பட்டு உழைத்துப் பொருள் ஈட்டிப் பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும்போது குழந்தைகளும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் அக்குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய, அவர்களின் மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். சாதாரண நிலையிலிருந்து - மிக உயர்ந்த பதவி வகித்தவர்களின் வரலாற்றினை உணர்ந்து நாமும் அவ்வாறு வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற எண்ணம் மேலிடுமானால் குழந்தைத் தொழிலாளர் அவலநிலைமாறும்.

முடிவுரை:
        அரசாங்கம், பெற்றோர், சமூக நல அமைப்புகள், தொழில் அதிபர்கள், ஆசிரியர் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்துச் செயல்பட்டால் நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி விடலாம். இன்று ஏடு தூக்கிப்பள்ளியில் பயிலும் சிறுவர் நாளை நாடுகாக்கும் தலைவர் என்று கருதி குழந்தை நலன் நிலை உயரப் பாடுபடுவோமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி