திருக்குறள் பற்றிய கவிதை

முப்பாலுக்கு அப்பாலே முழுநூல் இல்லை
முன்னேற்றம் அடைவோர்க்கு குறளே எல்லை
தப்பாமல் வாழ்விக்கும் தர்க்க நூலாம்  
தத்துவங்கள் எளிமையாய்த் தழைக்கும் நூலாம் 
ஒப்புக்குச் சொல்லவில்லை இதனில் இல்லாப் 
பொருளில்லை ஒன்றரையாம் வரிகள் தன்னில்
செப்புகின்ற யாவுமேநம் வெற்றி சொல்லும் 
தனித்தமிழ் நூல் தலைநிமிரத் தரணி வெல்லும் 

அறம் பொருள் சேர் இன்பத்தை காட்டும் நூலாம் 
அழகியலை அன்பினோடு ஊட்டும் நூலாம் 
திறமுள்ளார் வாழ்வினிலே துடுப்பு நூலாம் 
தினம்பகையைத் தூர்க்க வந்த தடுப்பு நூலாம் 
மறத்தமிழர் மானத்தின் மாண்பு நூலாம் 
மன்பதையில் பொதுவுடமை மணக்கும் நூலாம் 
நிறம், இனம், மதப்பிரிவுகளை நீக்கும் நூலாம் 
நெஞ்சமுள்ளோர் வாழ்வு நீதி காக்கும் நூலாம் 

அவலங்கள் வந்துவிட்டால் அறிவைத் தேடு 
அறிவை நாம் பெறுவதற்கு குறளைத்தேடு 
சுவரின்றி சித்திரமிங்கு இல்லை என்று 
சுயசிந்தை தன்மானச் சிறகு கொண்டு
நவயுகத்தின் தெரிவோடு குறளைத்தேடு 
நல்ல உள்ளம் நன்மை தரும் சித்தாந்தத்தை 
கவறாடல் இல்லாமல் களங்கமின்றி
குவாலயம்தாம் போற்றிடுமோர் குறளைப்போற்று.

கவிஞர் வா.கோ.இளங்கோவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி