சாலை பாதுகாப்பு - கட்டுரை
முன்னுரை:
ஒவ்வொரு நாளும் வெளியாகும் நாளிதழ்களைப் புரட்டினால் சாலை விபத்துக்கள் என்று தலைப்பிட்டுச் செய்திகள் வருவதைப் படிக்கிறோம். எண்ணற்ற உயிர்கள் பலியாகின்றன. கை, கால்களை இழந்து தவிக்கும் மக்கள் எத்தனை பேர்; இதற்குக் காரணம் சாலை விதிகளை மதியாமை என்ற பண்புதான். எவ்வாறு சாலை விபத்துகளைத் தவிர்ப்பது என்பதைக் காண்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாலைகளின் நிலைமை:
தற்போதுள்ள சாலைகளின் நிலைமையைப் பார்த்தால் நமக்குப் பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாகத் தோற்றம் அளிக்கின்றன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி, மேடும் பள்ளமும் எங்கிருக்கின்றன என்று தெரியாமல் தவிக்கிறோம். பயணம் செய்யும்போதுதான் சாலைகளின் நிலைமையை நாம் நேரில் உணர முடிகிறது. சாலைகளின் சில இடங்களில் குப்பைகளைக் கொட்டி குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது, மாநகராட்சியும், சாலைப் பராமரிப்புத் துறையும் அவ்வப்போது இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இருப்பினும் சாலைகள் படுமோசமாகவே இருக்கின்றன.
விபத்துக் காரணம்:
சாலை சரியாகப் பராமரிக்கப் படாதது, மிதமிஞ்சிய வேகம், சாலைவிதிகளை மதிக்காமல் வண்டிகளை ஓட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல் குறுகலான சாலையில் இரண்டு, மூன்று வண்டிகள் ஒன்றையொன்று முந்த வேண்டும் என்ற மனப்பான்மை 'நுழைவு இல்லை' சாலையில் செல்லுதல், குறுகிய காலப் பயிற்சியை முடித்து ஓட்டுநர் உரிமம் வாங்கி கனரக வண்டிகளை ஓட்டும் அனுபவம் இல்லாமை போன்ற காரணங்கள் சாலை விபத்துகளை உண்டாக்குகின்றன.
தவிர்க்கும் முறைகள்:
போக்குவரத்துக் காவல் துறையினர், விபத்துகள் நேரக் கூடாது, தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் சாலைகளில் நின்று கொண்டு வழிகாட்டுகின்றனர். பள்ளிகளில் படிக்கும்போதே சாலைவிதிகளைக் கற்றுக் கொடுக்கின்றனர். தானியங்கி அறிவிப்பினை மதித்து நடந்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். 'இனியொரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம்' என்ற கவிஞர் கூற்று சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடிப்போருக்கும் பொருந்தும். சுயநினைவோடு வண்டிகளை ஓட்ட வேண்டும்; வாகன ஓட்டுநர்கள் கூடுதல் நேரம் வேலை செய்யாமல் இருக்க வேண்டும். எந்த வண்டிகளிலும் பாடல்களை ஒலிபரப்பும் வானொலிப் பெட்டிகள் இல்லாமல் இருக்கவேண்டும். மிதமான வேகம், யாரையும் முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாமலிருக்க வேண்டும். 'வேகம் விவேகமன்று' என்பதை. உணர்தல் வேண்டும்.
முடிவுரை:
மனித உயிர்கள் மட்டுமல்லாமல் பிற உயிர்களையும் நாம் சாலை விபத்தில் இருந்து பாதுகாக்க விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். வருங்கால இளைய சமுதாயத்தினர் சாலை விதிகளை நன்கு கற்று அதன் வழி சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடித்தால் சாலை விபத்துகளைத் தவிர்த்து இனிமையாக வாழலாம்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பதிலளிநீக்கு