அன்றாட வாழ்வில் அறிவியல்
முன்னுரை:
காலை விடிந்தது முதல் இரவு வரை அறிவியல் நம் வாழ்க்கையோடு ஒட்டிப் பிணைந்துவிட்டது. அறிவியல் நம் வாழ்வினை வளப்படுத்துகிறது. அறிவியலின்றி வாழ்க்கை இல்லை என்னும் அளவிற்கு அஃது இடம் பெற்றுவிட்டது.
கல்வி:
நாம் கல்வி கற்கப் பயன்படும் நூல்கள் யாவும் அறிவியல் கண்டறிந்த அச்சுப் பொறிகளே. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் நிறைந்த நூல்களை அது வழங்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளான வானொலியும், தொலைக்காட்சியும் பல்லாயிரக் கணக்கான மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றன. கல்விக்கு உதவும் ஆய்வுகள், பரிசோதனைக் கருவிகள் ஆகிய யாவும் அறிவியலால் ஏற்பட்ட சாதனைகளே.
மருத்துவம்:
மனிதனின் இதயத்தை ஊடுருவி அஃது இயங்கும் தன்மையைக் கண்முன் காட்ட ஒரு கருவி; நுண்ணுயிர் கண்டுபிடிக்கும் கருவி, நோய் கண்டுபிடிக்கும் கருவி, அறுவை முறை போன்றவற்றில் பயன்படும் புதிய புதிய கருவிகளும் அறிவியல் தந்த நன்கொடைகளாகும். கருத்தடை, செயற்கை முறையில் கருத்தரித்தல், நோய்த் தடுப்பு முதலியவற்றில் அறிவியலின் பங்கு அளவிடற்கரியது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, முகத்தைத் திருத்தி அழகுறச் செய்கிறது. இதயம் - கை கால் முதலிய உறுப்புகளைச் செயற்கையாக இயங்க வைக்க முடிகிறது.
போக்குவரத்து:
விண், மண், நீர் இவற்றில் செல்ல போக்குவரத்துச் சாதனங்கள் அன்றாடப் பயணத்திற்கும், பொருளியல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகின்றன. ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு விரைவாகவும் எளியதாகவும் செல்ல உதவுகின்றன. மிதிவண்டி, உந்து வண்டி புகைவண்டி, வானூர்தி, கப்பல் முதலிய போக்குவரத்துக் கருவிகள் நம் அன்றாட வாழ்வில் அதிக இடத்தைப் பெறுகின்றன.
உறைவிடம்:
பெரிய கட்டிடங்கள் கட்டவும் அறிவியல் இன்று துணை புரிகிறது. செங்கற்களுக்கு மாற்றாக அவற்றைவிட உறுதியாக, சிக்கனமாக கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பளபளப்பாகவும், வழவழப்பாகவும் தரையை அமைக்கக் கற்களை அறிவியல் வழங்குகிறது. விசையைத் தட்டினால் எரியும் மின்விளக்குகள், கோடையில் குளிர் தரும் மின்விசிறிகள், தட்பவெப்பப் பொறிகள், களிப்பூட்டும் தொலைக்காட்சி,செவிக்குணவூட்டும் வானொலி, உணவுப் பொருள்களைப் பல நாட்கள் கெடாமல் காக்கும் குளிர்பதனப்பெட்டி, காற்றழுத்த சமையற்கலன்கள் ஆகியவை யாவும் அறிவியலின் ஆக்கங்களாகும்.
முடிவுரை:
அறிவியல் வியத்தகு வளர்ச்சியடைந்தாலும் இதில் ஆபத்துக்களும் தீமைகளும் நிறைந்திருக்கின்றன. அறிவியலைப் படைத்த மனிதனின் மூளை வேலை செய்ததைப்போல அதனை நல்வழியில் பயன்படுத்தவும் மனிதன் முயலவேண்டும். அறிவியல் நெருப்பை போன்றது அதை நல்வழிக்கு மட்டும் பயன்படுத்தி பயன்பெறுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக