குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேரு - பேச்சுப்போட்டி


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே.
அன்பெனும் குடில் புகும் அரசே..
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே..
அன்பெனும் அணுவுள்ளமைந்த பேரொளியே, 
அகழ்வாரை தாங்கும் புவியே,
செந்தமிழ் மொழியே, 
தேன் தமிழ் சுவையே, 
இங்கு கூடியிருக்கும் அவையே,
அவையில் இருக்கும் பெருந்தகையே,
நேரிய பணி செய்ய காத்திருக்கும்
கூரிய அறிவுபடைத்த எம் இளம்
காளையர்களே,
கன்னியர்களே... 
உங்கள் அத்துனை பேரையும்
வணங்கி முடித்து 
பேசப்போகிறேன் என் 
தலைப்பை பிடித்து....
பிறரை பார்த்து பொறாமை படாது , யாருக்கும் மனதளவில் தீங்கு நினைக்காது , தானும் மகிழ்ச்சியாகவும் பிறரை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் ஒரு பருவம் குழந்தைப்பருவம், நெஞ்சில் வஞ்சகம் இல்லாத அந்த குழந்தையின்  சிறு கையால் பிசையப்பட்ட சிறு கூழானது , அமிழ்தத்தைக் காட்டிலும் மிக இனிது என்கிறார் திருவள்ளுவர் 
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்" ... என்று. 

"குழந்தையும் தெய்வமும் 
குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும்
மனத்தால் ஒன்று
கள்ளமில்லா உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம்
கண்ணெதிரே காணுகின்ற
தெய்வங்கள் ஆனார்... "
என்று வாலி தன்னுடைய எழுத்திலே கூறுகிறார்...
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் தினம் என்று கொண்டாட காரணமாக ஒருவர் இருக்கிறார்...
அரசியல் துறையில் தேர்ச்சியும் எத்தனை அனுபவம் பெற்றிருந்தாலும் உள்ளத்தால் குழந்தை மனதுடனேயே இருந்தவர்.  குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டியவர்.  குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். "நவீன இந்தியாவின் சிற்பி" என்கிற அடைமொழிக்கு சொந்தக்காரரான  ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.. 
தனது மகன் பல்கலைக்கழகத்தின் எந்த வாசலில் வெளியே வருவான் என தெரியாததால் அத்துணை வாசல்களிலும் தனது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும் அளவிற்கு அன்றைய மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் மோதிலால் நேரு. மோதிலால் நேருவுக்கும் சொரூபராணி அம்மையாருக்கும் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால் நேரு.
தனது பதினைந்தாவது வயதில் இங்கிலாந்துக்கு கல்வி பயிலச்சென்றார் அங்கு படிப்பை முடித்த நேரு பின்பு கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து படித்தார். சட்டத்துறையில் 1912 ஆம் ஆண்டு  பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 1916 ஆம் ஆண்டு முதன்முதலாக காந்தியை சந்தித்தார். 1918 ஆம் ஆண்டு ரவுளட்  சட்டத்தை எதிர்த்து போராடினார். சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தனது அனல் பறக்கும் கருத்துப் பேச்சுகளாலும் எழுத்துக்களாலும் மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். பல போராட்டங்களுக்காக  சிறை சென்றவர், ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல நான்கல்ல ஐந்தல்ல, 16 ஆண்டுகள் விடுதலைக்காக தனது வாழ்வை சிறையில் கழித்தவர் நேரு அவர்கள்,

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, 
இந்த நாடே இருக்குது தம்பி,
சின்னஞ்சிறு கைகளை நம்பி, 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி."

என்கிறது ஒரு திரைப்பட பாடல் ... 
இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள், அவர்கள் தான் நாளைய எதிர்காலம் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் ஜவஹர்லால் நேரு.  நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தார் . இதன் காரணமாகவே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) உருவாக்கப்பட்டன. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். குழந்தைகளின் மீது நேருவுக்கு அளவு கடந்த அன்பு உண்டு. குழந்தைகளை எங்கு பார்த்தாலும் மிகவும் பிரியமுடன் அன்பு செலுத்துவார். அந்த நேரத்தில் தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். தன் சட்டைப்பையில்  ஒரு ரோஜாவை எப்போதும் வைத்திருப்பார். அதனால் தான் குழந்தைகள் இவரை அன்புடன் 'நேரு மாமா' என அழைத்தனர்.
குழந்தைகளுக்கான மேற்கோள்களையும்,  புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அதில் ஒரு புகழ்பெற்ற பொன்மொழி தான், “இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள்” என்று ஜவஹர்லால் நேரு கூறியது. நேருவின் எண்ணங்கள், தத்துவம், தொலைநோக்குப்பார்வை மற்றும் மேற்கோள்கள் ஆகியவை, அவருக்கு “ஆசிய ஜோதி” என்ற சிறப்பு பெயரை பெற்றுத்தந்தது. இளைய தலைமுறையே எதிர்கால வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பல நல்ல செயல்களை செய்தார் . இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஜவகர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 14 அன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் ஒருபுறம் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வியும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம். ஆசிரியர்கள் மட்டுமல்ல குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களும் உறவினர்களும் தங்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புகளை நீக்கி குழந்தைகளுடைய ஆசைகளையும் அவர்களிடம் இருக்கும் ஆர்வத்தையும், மனநிலை எப்படி உள்ளது என்பதையும் அவர்களின் அணுகுமுறைகளையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாடத்தை போதிக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறைதான் நாளை குழந்தைகளின் ஆக்கபூர்வமான சாதனைகளுக்கு வித்தாக அமையும் என மனதில் பதிக்க வேண்டும். இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கும்  குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட ரோஜாவின் ராஜா விற்கு நாம் செய்யும் கைம்மாறு என்று கூறி 
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி
சாறு இல்லாத பழம் ருசிக்காது,
வலி இல்லாத வாழ்க்கை ரசிக்காது,
தோல்வி இல்லாத செயல் இனிக்காது,
வெற்றி மட்டுமே என்றும் நிலைக்காது,
துன்பம் வரும்போது துவளாது,
தோல்வியை கண்டு கலங்காது,
வெற்றியோ தோல்வியோ எது வரினும்
கடமையைச் செய்வோம்.
வெற்றி கிடைத்தால் அடக்கம் எழட்டும்,
தோல்வி கிடைத்தால் அனுபவம் பெறட்டும்..
முடிவில் வணங்குவது என் வழக்கம் 
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்...


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி