ஒழுக்கம் - பேச்சுப்போட்டி


அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே..
அன்பெனும் அணுவுள்ளமைந்த பேரொளியே, 
அகழ்வாரை தாங்கும் புவியே,
செந்தமிழ் மொழியே, 
தேன் தமிழ் சுவையே, 
இங்கு கூடியிருக்கும் அவையே
அவையில் இருக்கும் பெருந்தகையே,
உங்கள் அத்துனை பேரையும் வணங்கி, 
பேசப்போகிறேன் என் தலைப்பில் இறங்கி... 

இந்த உலகத்திலேயே மிகவும் முக்கியமானது என்றால் மிகவும் பெரியது என்றால் உயிர், ஆனால் ஒழுக்கம் அந்த உயிரை விட மேன்மையானது என்று கூறுகிறார் வள்ளுவர் 
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்று...
உலகத்தில் மிக உயர்வானது கல்வி என்பதை 
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று கூறினாலும் அந்த கல்வியை விட ஒழுக்கமே உயர்வானது என்பதை 
"ஆர்கலி உலகத்து மக்கட்க்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை
என்கிறது முதுமொழிக்காஞ்சி... 
"உப்பில்லா பண்டமும், 
 ஒழுக்கமில்லா செயலும் 
குப்பைக்கு சமம்
என்கின்றனர் சான்றோர்.

ஒழுக்கம் உயர்வு தரும், 
ஒழுக்கம் இருந்தால் உலகே தொழும்.
நீரின்றி அமையாது உலகு, 
சாதி மதம் பார்க்காது பழகு ,
ஒழுக்கமே நம் உண்மையான அழகு.. 
பூவில் தேனின் மணம் நுகர்ந்தே
பறந்து தேனீ சூழ்வது போல் 
அழியா ஒழுக்கம் அமைந்திருந்தால் 
அவரை உலகே தொழுதிடுமே ...
பணம் இருந்தால் மட்டும் ஒருவன் உயர்ந்துவிட முடியாது 
ஒழுக்கம் இருந்தால் மட்டும் போதும் எவனும் தாழ்ந்து விட முடியாது. 
ஐம்புலன்களையும் அடக்கி ஒழுக்க விதிகளை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மையைக் திருமூலர் எவ்வாறு கூறுகிறார் தெரியுமா ...
"பார்ப்பா னகத்திலே பால்பசு ஐந்துண்டு 
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன 
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால் 
பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே” 
என்கிறார் .
எந்த ஒன்றும் நிலைத்து நிற்க ஒரு நேர்த்தி வேண்டும் அதுவே ஒழுங்கு. அதுதான் ஒழுக்கம். உங்கள் பெயரும் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையும் என்றும் இந்த உலகில் அழியாது நிலைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தே ஆக வேண்டும்.
ஒழுக்கத்தை போற்றி பின்பற்றி வாழ்ந்தவர்கள் உலக மகான்களாக உயர்ந்துள்ளார்கள். வள்ளலார், புத்தர், இயேசு பெருமான், நபிகள் நாயகம் என்று அனைவருமே ஒழுக்கம் தன் உயிரினும் மேலாக கருதியவர்கள் தான். புத்தரின் கொல்லாமை நெறி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், தன்னை சிலுவையில் அறைந்தவரையும் மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டிய இயேசு பெருமான், தன் மீது குப்பையை கொட்டிய பெண்மணியின் உயிரை காத்த நபிகள் நாயகம், அளவில்லா துன்பத்தை அடைந்த போதும் ஒருபோதும் பொய்யுரைக்க மாட்டேன் என மறுத்த அரிச்சந்திரன் போன்றவர்கள் ஒழுக்கத்தினால் உயர்ந்த சான்றோர்கள் ஆவர்.சினம் , பொறாமை , பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், கொடிய சொற்களை நீக்குதல் ஆகிய நான்கை நீக்கி ஒழுக வேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
மனிதனுக்கு பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவை இறைவன் கொடுத்ததற்கு காரணம் அவன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். உள்ளத்தாலும் , சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்து கொள்வது தான் ஒழுக்கமாகும். மனிதனை மனிதனாக வாழ வைப்பது ஒழுக்கம். மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதும் ஒழுக்கம். தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எண்ணம், சொல், செயல் இவற்றால் எந்த தீங்கும் விளைவிக்காதது தான் உண்மையான ஒழுக்கம் என்று கூறி அவையோர் அனைவருக்கும் நன்றி கூறி ...
வெற்றி மட்டுமே என்றும் நிலைக்காது, 
தோல்வி இல்லாத வாழ்க்கை இனிக்காது,
முயற்சி என்ற விதையை விதைத்து கொண்டே இருப்போம்,
முளைத்தால் மரம்,
இல்லை என்றால் மண்ணிற்கு உரம்,
தமிழனாய் பிறந்ததே ஒரு வரம்,
வணங்கி முடிப்பதே தமிழின் அறம்.
முடிவில் வணங்குவதே ஒழுக்கம்
அதுவே என்றும் என் பழக்கம் ,
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி