பேச்சுப்போட்டி- 'மொழிப்பற்று' 'தாய்மொழிப்பற்று' 'தமிழ்ப்பற்று'

நடுவர் அவர்களே ஆசிரிய 
பெருமக்களே வருங்காலத்தூண்களே எதிர்காலம் நீங்களே என் அன்பினிய மாணவச் செல்வங்களே ஆன்றோர்களே சான்றோர்களே என்னை போன்றோர்களே வையகமே வானகமே என்னை வாழ வைத்த தமிழகமே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் ஆகட்டும் என்று சொல்லி...
 எனது மொழிப்பற்றையும் தமிழ் பற்றையும் கலந்து தாய்மொழிப்பற்று எனும் தலைப்பில் பேச வந்திருக்கிறேன் தாருங்கள் தங்கள் காதுகளை.....
 மலைகளையும் கடல்களையும் கடந்த மொழி 
மக்கள் தம் வாழ்மொழியில் நிலைத்த மொழி
முத்தமிழாய் முறுவலிக்கும் நற்றமிழாம்
மொழிக்கெல்லாம் தாயாக ஆனவளாம்
முத்து முத்தாய் இலக்கணமும் இலக்கியமும்
முடிசூடி புகழெல்லாம் கொண்டவளாம் 
கத்துக்கடல் புகழ்தாண்டி பொலிந்தவளாம் 
கனிச்சுவையாய் இனிக்கின்ற மொழியினளாம்
இத்தரையில் நிகரில்லா பெரும்வளத்தை 
ஏற்றமுற கொண்டவளே தமிழன்னை.
பிறந்தது முதல் அறிந்து பேசிவரும் மொழியே தாய்மொழி. தாயானவள், உணவூட்டுவதோடு உணர்வையும் ஊட்டுகின்றாள்.  அதற்குப் பயன்படுவதும் தாய்மொழியே. 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை" என்பது போலவே, தாய் மொழியிற் சிறந்த வேறு மொழியுமில்லை. பிற மொழிகளைப் பயிலலாம் எனினும், அறிவு வளர்ச்சிக்குத் தாய் மொழியே அடிப்படை. அத்தகு சிறப்புடைய தாய் மொழியின்மீது நாம் பற்றுக்கொள்வதே அறிவுடைமை. நம் தாய்மொழி தமிழாகும். உலகில் முந்தித் தோன்றியதாகவும், உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழி. இலக்கிய, இலக்கண வளங்கள் நிரம்பப் பெற்றது இம்மொழி. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இதனை வளர்த்தன. முதற்சங்க நூல்கள் கிடைக்கப் பெற்றில; இலக்கணமாம் தொல்காப்பியம் இடைச்சங்க நூலாயினும், தமிழர்தம் வாழ்வியலைக் காட்டும் இலக்கியமாகவும் உள்ளது: கடைச்சங்க நூல்களாக எட்டுத் தொகை, பத்துப்பாட்டு,பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவை உள்ளன. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியாகத் தமிழ்க்குடி உள்ளது. கீழ்க்கணக்கு நூல்களாம் திருக்குகுறளும் நாலடியாரும் சிறந்த அறநூல்கள். திருக்குறளோ, 'உலகப் பொதுமறை' என்றே பேசப்படுகின்றது. 'வாழிய செந்தமிழ்' என வாழ்த்தினார் பாரதியார்; 'தமிழுக்கும் அமுதென்று பேர்' எனப் பாடினார் பாவேந்தர். அன்று முதல் இன்றுவரை, தாயாம் தமிழைப் பாடாத கவிஞரே இலர் எனலாம். நாமக்கல்லாரும், 'தமிழர் என்றோர் இனமுண்டு' எனத் தமிழ்ச் சமுதாயத்தை நினைவு கூர்ந்தார். எவ்வளவு சொன்னாலும்; தமிழின் சிறப்புகளை அளவிட இயலுமோ!
தாய்மொழியின் மீது ஒவ்வொருவரும் பற்றுக்கொள்ள வேண்டும். அப்பற்றில்லாதவன். தாயையே பழித்தவனாவான். பெற்ற தாயைக் காட்டிலும், உற்ற தாய்மொழி உயர்ந்ததாகும். 'தன்னைப் பழித்த வனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு; தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!' எனத் துடிப்புடன் பாடினார் புரட்சிக் கவிஞர். தாய்மொழியும் தாய்நாடும் நம் இரு கண்கள். இரு கண்களின் இணைந்த பார்வையே முழுப் பார்வையாகும். 
தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறுவதும், எல்லாத் துறைகளிலும் தாய்மொழியைப் பயன்படுத்துவதும் தமிழர்தம் தலையாய கடமை. தமிழ் வாழ நம் வாழ்வு அமையுமாக! தமிழ் வளரத் தகுபணிகள் செய்வோமாக! 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று' சங்கை முழக்குவோமாக!
பேச வாய்ப்பளித்து, பேசவிட்டு அமைதி காத்து , ஒத்துழைத்த அத்துணை பேரையும் சிரம் தாழ்ந்து வணங்குவதே நல்ல பழக்கம், அதுவே என் வழக்கம், தமிழே என்றும் என் முழக்கம், பேசி முடிக்கிறேன் வணக்கம்.

இதை எப்படி பேசி உச்சரிக்க வேண்டும் என்பதை நமது youtube வலைதளத்தில் பார்க்கவும்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி